பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ். அருள்நெறித் தந்தை என அனைவராலும் அன்பொழுகப் பாராட்டப்பெற்ற குருமகாசந்நிதானம் ஆற்றிய அற்புதச் சொற்பொழிவுகள் சமய இலக்கியம் என்று முகிழ்த்திருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. சமயம் மனிதனைச் சமைப்பதற்கே; பண்படுத்துவதற்கே! சமயம் வாழ்க்கை நெறி; வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நெறி, சமய உலகம் சமூகத்தை விட்டு விலகிச் சென்ற பொழுதுதான் - ஏழாம் நூற்றாண்டில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமானாலும், நாவுக்கரசர் பெருமானாலும் ஏற்றப்பட்ட ஞானவேள்வி சுடர்விட்டுப் பிரகாசித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் உச்சக் கட்டமாகப் பொங்கிப் பரிணமித்தது. இடையில் சமய உலகில் ஒரு தொய்வு ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமய உலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள் அருள்நெறித் தந்தை குருமகாசந்நிதானம் தவத்திரு அடிகளார் பெருமான். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் “அடிகளார்” என்ற சொல் அவர்கள் ஒருவரைத்தான் குறித்தது. சமயத்தையும் சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கின்ற உறவுப் பாலமாக விளங்கினார்கள். சமூகத்தை விட்டுச் சமயம் விலகிச் சென்றபொழுது சடங்கும் ஆரவாரத் தன்மையும் நிறைந்திருந்த சமயத்தை மக்களுக்குரியதாக மாற்றிக் காட்டினார்கள்.

சமய இலக்கியத்தை ஓதி உணர்வதோடு அல்லாமல் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். நாட்குறிப்பேடு போல் சமய இலக்கிய நாட்குறிப்பேடு ஒன்று பேணப்பட்டது. அதில் அறுபத்து மூன்று நாயன்மார் ஒவ்வொருவரின் நாள் குறிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, கண்ணப்பநாயனாரின் நாளன்று கண்ணொளி வழங்க உதவி செய்தல் என்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும்.