பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அச்சுறுத்துகின்றார்கள். கடவுளைக் கும்பிட்டவனுக்கு மோட்சமும், கடவுளைக் கும்பிடாதவனுக்கு நரகமும் கிடைக்கும் என்றால் கடவுள் இலஞ்சம் வாங்குபவரா? கடவுளை நாம் புகழ்ந்து பாடும் பாடல்களைப் புகழ் உரைகளை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, கடவுள் மோட்சம் அருளுவார் என்று எண்ணுவது தவறு; அது நடக்கவே நடக்காது. இறைவனுக்கு நமது மன நெகிழ்ச்சியும் மனத் தூய்மையும்தான் தேவை. இவற்றை உண்டாக்கிக் கொள்ளத் தோத்திரப் பாடல்களையும் பிறவற்றையும் சாதனங்களாக வைத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

கங்கை ஆற்றில் மீன் எப்போதும்தான் கிடக்கிறது. காவிரியில் தவளை எப்போதும்தான் இருக்கிறது. அவற்றிற்கு ஞானம் வருகிறதா? கிடையாதே! ஏன்? அவற்றிற்குச் சிந்தனை கிடையாது. இந்த உலகத்தை நாம் போற்ற வேண்டும்; இந்த உலக மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதுதான் சிறந்த வழிபாடு.

பஞ்சம் நீங்கப் படிக்காசு வேண்டுமா?

இன்றும் பலர் மூட்டை கட்டிக் கொண்டு காசிக்குப் போவார்கள். ஆனால் சுற்றுப் புறத்திலே - தெரு மருங்கிலே - வாழப் பிறந்தும் வாழ வகையின்றி அவதிப்படுகின்ற காட்சியைக் கண்ணிருந்தும் காண மறுக்கிறார்கள்! விழியிருந்தும் குருடர்களாகிறார்கள்! காசிக்குப் போவதில் தவறில்லை. ஆனால் தங்கள் கொல்லைப் புறத்திலே ‘குய்யோ முறையோ’ என்று எழும் கூக்குரலைக் கேட்கமாட்டார்கள். தெருப்பக்கத்திலே எழும் அழுகுரலைக் கேட்கமாட்டார்கள்! அண்மையில் நடைபெற்ற உலக மாநாட்டில் வெளியான ஒரு செய்தி, மத உலகத்திற்கே ஓர் அறைகூவலாக இருக்கிறது. அது, கிறிஸ்துவ மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய மதமாக இருந்தாலும் சரி தான். அந்த அறைகூவல் உலக மதங்கள் அனைத்திற்கும் பொதுவே! “நாள் ஒன்றுக்கு உலகில்