பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

175


மூசு வண்டறைப்
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே!

என்பது அப்பர் வாக்கு.

ஆம், அவ்வளவும் பொதுமை. யாராவது சுவர், எழுப்ப முடியுமா? வேலி போட முடியுமா? மாசில்லாத வீணையின் இனிய ஒலியை, ஏழையும் கேட்டு அனுபவிக்கலாம்; செல்வனும் கேட்டு அனுபவிக்கலாம் செவிகள் மட்டும் செவிடாகாமல் இருந்தால்! மாலைக்கால மதியத்தின் அழகு — தண்ணொளி இன்பம், கோடீஸ்வரனுக்கும் குடிசையில் வாழ்வோனுக்கும் பொது — மனக்குறையில்லாதார் அனைவருக்கும் மாலை மதியம் இனிக்கும்; இன்பம் செய்யும். அதுபோலவே இறைவனின் தண்ணருளும் எல்லார்க்கும் பொது. அதை அனுபவிக்க மொழி வேறுபாடு கிடையாது; இனவேறுபாடு கிடையாது; மதவேறுபாடு கிடையாது. உள்ளம் மட்டும் கல்லாக — இரும்பாக இல்லாமல் உண்மையன்புடனிருக்க வேண்டும்.

இறைவனுடைய திருவடிகளும் இறைவனின் ஆக்கத்தினால் ஏற்பட்ட உலகியல் பொருள்களும் இங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றை மக்கள் அனைவரும்கூடி அனுபவித்துப் பயன் பெறவேண்டும் என்ற சிறந்த தத்துவத்தை - சித்தாந்தத்தை நாம் ‘மாசில் வீணையும்’ என்ற அப்பரடிகளின் பாடல் வாயிலாக அறிகிறோம்.

மொழி ஒருமைப்பாடு

இன்று மொழி ஒருமைப்பாடு, இன ஒருமைப்பாடு என்றெல்லாம் பேசப் பெறுகிறது. இன்று மொழிச்சிக்கல் நமது நாட்டில் உச்சம் பெற்றிருக்கிறது. எனவே நாம் யாரும் ஆத்திர அவசர உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் அமைதியாக ஆழ்ந்து சிந்தனை செய்து பார்க்க வேண்டும். மனிதனுக்கு