பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே’ என்கிறார். எல்லா உலகத்திலும், உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒருமைப்பாடு நின்று நிலவ வேண்டும் என்றார். இன்று விரிந்த சிந்தனையுடையவன், பரந்த கருத்துடையவன் ஒருமைப்பாட்டை நினைத்துப் பார்க்கிறான். விரிந்து பரந்த உலகத்தோடு உறவு கொள்ளக் கைநீட்டுகிறான்.

அப்பரடிகள் காலத்தில், உலகத்தோடு உறவுகொள்ள நல்ல வசதிகள் இல்லாதிருந்த காலத்தில் ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே!’ என்று பாடினார், அப்பரடிகள். உலகத்திற்கெல்லாம் இறைவன் ஒருவனாய் நிற்கின்றான் என்ற சித்தாந்தப்படி இங்கு நாம் உலக ஒருமைப்பாட்டைப் பார்க்கிறோம்.

சமயவழி ஒருமைப்பாடு

இதற்கு அடுத்தபடியாகச் சமய ஒருமைப்பாடு. அந்தச் சமய ஒருமைப்பாட்டையும் நாம் அப்பரடிகளிடத்துக் காணலாம். “ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன” என்றார். விரிவிலார் வேறொரு சமயம் சொன்னாரேனும் அதுவும் எம்பிரானுக்குப் பொருந்தும் என்று கூறுகிற அளவிற்குச் சமய ஒருமைப்பாடு இருந்தது. அப்பரடிகள் கூறிய மொழி ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு மூன்றும் உலகில் நிலவுமானால் சண்டை ஏது? சச்சரவு ஏது? அமைதி தவிர வேறொன்றும் இருக்க முடியாது. அப்பரடிகள் கூறுவதுபோல ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை!’ இவ்வளவு சிறந்த ஒருமைப்பாட்டை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் வலியுறுத்தியும்கூட, இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட ஏன் வளரவில்லை? நம்மிடையே ஒருமைப்பாட்டுக்குறை எப்படி வந்தது? ஆழ்ந்து சிந்தித்தால் இதற்குக் காரணம் தெரியவரும். நம்முடைய