பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
181
 

மனத்திலே நெகிழ்ச்சியில்லை; சுயசிந்தனை ஓட்டம் இல்லை. இதற்காகத்தான் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்று நாம் வலியுறுத்துகிறோம். தாய்மொழிச் சிந்தனை மனிதனைப் பிரிப்பதன்று. உலகில் வாழும் மற்றவர்களோடு நாம் பழக, வேறு மொழிகளையும் கற்கவேண்டும். ஆனாலும் தாய் மொழிச் சிந்தனையிலிருந்து விலகக்கூடாது. தாய்மொழிச் சிந்தனைதான் உணர்வைப் பெருக்கும்; உணர்வைச் சுரப்பிக்கும்! இதனால்தான் நாம் தாய்மொழியில் வழிபாடு வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இது தவிர நமக்குப் பிற மொழிகளிடத்து வெறுப்போ, காழ்ப்போ துளியும் இல்லை.

கைம்மாறு கருதாக் கடப்பாடு

அடுத்து, தொண்டின் நெறி நின்று தொண்டின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார் அப்பரடிகள். “தொண்டு செய்! தொண்டு செய்வதே மனிதனின் வாழ்க்கை! தொண்டலால் உயிருக்கு ஊதியமில்லை!” என்றார் அப்பரடிகள். உடம்பிற்கு ஊதியம் பணம், காசு, பொருள் முதலியன. உயிருக்கு ஊதியம் தொண்டு ஒன்றுதான். தொண்டு செய்வதாலே மனிதன் உயர்கிறான்; அவனுடைய உள்ளீடு சிறக்கிறது. எனவேதான் “தொண்டு செய்! தொண்டோடு பக்தி செய்!” என்றார்.

நாம் நடக்குபோது வலக்காலை வைத்தவுடன் இடக் காலை யோசித்தா எடுத்து வைக்கிறோம்? நாம் நடந்து செல்லவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டதும் எப்படி வலக்காலும் இடக்காலும் மாறி, மாறித் தொடர்ந்து இயல்பாக வைக்கப் பெறுகின்றனவோ அப்படியே வாழ்க்கையில் தொண்டும் பக்தியும் மாறி மாறி இயல்பாகவே நடைபெற வேண்டும். ஒரு கால் தொண்டு, இன்னொரு கால் பக்தி. இரண்டு கால்களாலும் நடக்கின்ற மனிதன் எப்படித் தனது நடைப் பயணத்தை இன்பமாகச் சிறப்பாக