பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னும் சிலர் திருத்துறை, திருக்குளங்களில் நீராடுவதில் வல்லவர்கள்! கங்கை என்றும் காவிரி என்றும் சுற்றித்திரிந்து மூழ்கிக் குளித்து மகிழ்கின்றனர். ஆனாலும் அவர்களிற் பலர், சராசரி மக்களாகக்கூட விளங்காமையைப் பார்க்கிறோம். நறுநீரால் (தீர்த்தத்தால்) இவர்களுக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, இவர்களால் நறுநீர் கெட்டது என்னவோ உண்மை. இவர்களை ஆட்சி செய்யும் விலங் குணர்ச்சியிலிருந்து இவர்கள் விடுதலை பெறவில்லை. திருத்துறைகளில் மூழ்கி எழுந்திருப்பதால் திருவருட்பேறு பெற்று விடுவதென்றால் நீர் வாழ்வன அனைத்துமே பெற்றுவிடுமே! நண்டும் தவளையும் நாயகன் அருள் பெற்றிருக்கவேண்டுமே! அப்பரடிகள், வினாவிற்கேற்ற விடை தருகிறார். அப்பரடிகள், சமயத்தைப் பருவுடல் வாழ்க்கையில் மட்டும் கொண்டவரல்லர்: உயர்ந்த பட்டறிவில் திளைத்தவர். அவர் வாழ்ந்த மெய்யறிஞர்; புரட்சியிற் பூத்த புதுமலர்; புதுமணம் வீசிய நறுமலர்; அருள் மணங்கமழ்ந்த திருமலர்.

தண்ணீர் இயல்பாக ஓடும் தன்மையுடையது. எங்கும் கெட்டியான அடைப்பிருந்தாலன்றித் தண்ணீர் தேங்காது. உருண்டு ஓடுதல் அதன் இயற்கை. இங்ஙனம் ஓடும் தண்ணீரை ஓட்டைக் குடத்தில் இரண்டு கைகளால் அள்ளிச் சேர்த்து மூடி வைப்பது முடிந்த காரியமோ? தண்ணீரைக் கைகளால் அள்ளிப் பானையில் சேர்ப்பதற்கு முன்பே பாதி போய்விடும். பானையோ ஓட்டை! பானையில் விழுந்த தண்ணீரும் அடுத்த கைத் தண்ணீர் வருவதற்கு முன்பு ஓடிவிடும். இந்த நிலைமையில் ஓட்டைப் பானைக்குள் தண்ணீரை வைத்து எப்படி மூடுவது? வெறும் பானையைத் தண்ணீர் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு மூடினால்தான்! அப்படி மூடி வைப்பதால் என்ன பயன்? என்ற இரக்கத்திற்குரிய வினாவை அப்பரடிகள் வினவுகிறார். அதுபோல ஓரிடத்திலும் நிலைபெறாது உருண்டு ஓடும் மனம். இந்த மனம் தங்கியிருக்கின்ற குடமாகிய உடம்பைத்