பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
185
 

திருத்துறைகளில் குளிப்பாட்டித் திருவருள் கிடைத்ததாக நம்பி வாழ்வது ஓட்டைக் குடத்தில் ஓடும் நீரினை அடைத்து வைத்த முட்டாளின் செயலோடு ஒக்கும்.

இறைவனைக் கோடி துறைகளில் குளித்தாடுவதால் மட்டும் காண முடியாது; நெஞ்சு கலந்த அன்பினாலேயே காண முடியும். “ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்றும், “அருச்சனை வயலில் அன்பு வித்திட்டு” என்றும் மாணிக்கவாசகர் பேசுகின்றார். “ஐயன் ஐயாறனார்க்கு அன்பலால் பொருளில்லை” என்பர் அப்பரடிகளும். ஆதலால், இறைவனின் திருவருளைப் பெற அன்பே வழி; வேறு வழிகள் இறுதிப் பயனைத் தரா.

கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே

என்பது அப்பரடிகளின் திருப்பாடல்.

3. புழுவிற் கடைமனிதன்

மனிதப் பிறப்பு மிகமிக உயர்ந்தது. உயிரினம் அனைத்துக்கும் மனிதனே நாயகன். ஆண்டவனுக்கு அடுத்து அணியார் சிறப்புடையது மனித இனமேயாகும். ஏன்? ஆண்டவனையேகூட, வளர்ந்த மனிதர்கள் ஏவல் கொள்வார்கள். இத்தகு சிறந்த மனித இனம் இன்று தாழ்ந்து கிடக்கும் நிலையினை எண்ணினால் வேதனை பெருகுகிறது. ஏன்? எதனால்?

மனிதனை, மனித இயல்புகளை ஆராய்வதில் அப்பரடிகளுக்கு இணை யாரோ? அப்பரடிகள் இந்த ஆய்வின் முடிவுகளைப் பிறர்மீது ஏற்றிக்கூற மாட்டார். “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்பது வள்ளுவமன்றோ? எந்தக்