பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பட்டிருக்கின்றான். நெஞ்சிற்கு மெல்லியல்புகளை மனிதன் தந்து, நெஞ்சின் வழி இயங்குகின்ற பொறிபுலன்களாலே பயன் அடைய வேண்டும். அதனால்தான் நெஞ்சை இரந்து கேட்கிறார் திருஞானசம்பந்தர், நல்லவண்ணம் இருந்து துணை செய்யும்படியாக!

நெஞ்சத்தின் தொழில் - இயல்பு சுவைத்தலாகும்; ஆனால், அலையும் இயல்புடையதுமாகும். அது ஒன்றை நன்றென்று கருதி ஏற்றுச் சுவைக்கும். உடனடியாகவே, “சீச்சி, இது நன்றன்று” என்று பிறிதொன்றினை நாடும். நாடிப் பிடித்து நன்றென்று சுவைக்கும். பின் “சீச்சீ, இது நன்றன்று; முந்தியதே நன்று” என்று மீண்டும் போய்ச் சுவைக்கும். சில சமயங்களில் “இதுவா? அதுவா?” என்று விரைந்த முடிவுக்கு வரமுடியாமல் இடையிலும் நின்று அலையும். இதுவே நெஞ்சத்திற்குரிய தொழில்.

மனிதன் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு நலம்தரும் சுவையைத் தேர்ந்து அதனை நெஞ்சு துய்க்கும் படி செய்யவேண்டும். நெஞ்சு துய்ப்பதற்கே உரிய ஒன்று. அதற்குரிய அனுபவத்தை நாம் தேர்ந்து தேர்ந்து தெளிந்து வழங்கத் தவறிவிட்டாலும், அது தன் முயற்சியில் தன்னிச்சையாகத் துய்த்தற்குரிய பொருளைத் தேடி அலைகிறது. அதுபோதே அவலம் தொடருகிறது. நாள்தோறும், நாழிகைதோறும் தூய அன்பு, தொண்டு, நல்வழிபாடு ஆகியவற்றில் நெஞ்சத்தை ஈடுபடுத்தித் துய்க்கச் செய்தல் வேண்டும். அதற்கு அறிவறிந்த ஆள்வினை தேவை. அஃது அற்றவர்கள், நெஞ்சத்தைத் தன் போக்கில் விடுகிறார்கள். அது முன்னர்ச் சொன்னது போல் ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி நிறைவான துய்ப்புக் கிடைக்காமல் எய்த்து அலைகிறது; சோர்வடைகிறது; துன்பத்தின் கொள்கலன் ஆகிறது. நெஞ்சுக்கு உற்ற அனைத்து அவலங்களையும் மனிதனின் ஆன்மாவும் அடைய வேண்டியதிருக்கிறது. ஏன்? உடம்பும் பொறி புலன்களும்கூட, அல்லற்பட வேண்டியதிருக்கிறது.