பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

193


இனிய பாடல்! பாடிப் பயிலுக!

                                                
                                                என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
                                                        டென்னையோ ருருவ மாக்கி
                                                இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்ந்திட்
                                                        டென்னுள்ளங் கோயி லாக்கி
                                                அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
                                                        டருள்செய்த வாரு ரர்தம்
                                                முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
                                                       காக்கையின் போன வாறே.

                                      (அப்பர் தேவாரம்–நான்காந் திருமுறை திருவாரூர்: பழமொழி)

6. காயும் கனியும்

இந்த உலகிடைப் பல சமய நெறிகள் நின்று நிலவுகின்றன. இச்சமய நெறிகள் அனைத்தும் இலட்சிய நோக்கால் ஒருமைப்பாடுடையனவேயாம். ஆயினும் இலட்சியத்தைப் பற்றிய அறிவிலும் தெளிவிலும், அந்த இலட்சியத்தை அடைதற்குரிய நெறிமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இயல்பாய அறிவு அனுபவக் கூறுகளின் அடிப்படையிலேயே தோன்றுவன. இவ்வேறுபாடுகள் சிந்தனையுடையார்க்கு மகிழ்வையே தரும்; வெறுப்பினை விளைவிக்கா.

உயிர்களின் மேம்பாடு என்ற அடிப்படையில் சமய நெறிகள் ஒன்றுபட்டாலும் தத்துவ அடிப்படையில் மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் தத்துவக் கூர்தல் வழி தோன்றுவன. தமிழினத்தின் தனி நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி முழுதுற வளர்ந்த நெறியாகும். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பது பொருள். சித்தாந்தச் சிவநெறியில் இறைவன் கருணை நிறைந்தவனாக - தாயிற் சிறந்த தயாவுடைய தண்ணளியுடையோனாகப் போற்றப்

கு. இ. VII. 13.