பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படுகின்றான். திருநீறு உயிர்களுக்குக் கவசம், வினை நீக்கிப் பாதுகாப்புத் தரவல்லது. திருக்கோவையார் அருளிச் செய்த மாணிக்கவாசகர், குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்பதைப் போன்று இறைவன் தன்னைத் தொழுது எழும் உயிர்களின் “வினை வலம் நீறெழத் திருநீறணி அம்பலவன்” என்று ஆண்டவனைப் பாராட்டினார். இந்த அனுபவத்தைக் கண்டு சுவைத்தற்கேற்றவாறு கூறுபவர் நமது அப்பரடிகள். இறைவன், “மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான்” என்று இதயம் குளிரப் பாடுகின்றார். அவன்றன் திருவடியைத் தொழுதால் நோன்பின்றி - வருத்தமின்றி இறைவனே நம்மை வலிய ஏற்றுக் கொள்வான். அதனுடைய அடையாளமே அவன் வெண்ணிறு சண்ணித்த மேனியனாக இருப்பது. அவனைத் தொழாது உறிதுக்கித் திரிந்து உடலையும் உயிரையும் வருத்திக் கொள்வதால் பயன் என்ன? உடலையும் உயிரையும் வருந்துகின்ற நோன்புகளால் உயிர் உய்தி பெறலாம் என்று கூறும் சமய நெறிகள் காய் அனையவே.

பெரும்பாலும் காய்கள் சுவையாக இருப்பதில்லை. காய்களை எளிதில் பெறவும் முடியாது; அடித்துப் பறிக்க வேண்டும். காய்களைத் தின்று அனுபவிப்பதிலும் தொல்லை அதிகம். காய்கள் எளிதில் செரிக்கா; ஆண்டில் இளையர் உண்ண முடியாது; பிறிதொரு சுவையூட்டாமலும் உண்ண முடியாது; செரித்த பின்பும் காய்களால் பெறப்படும் உடற்பயன் மிகமிகக் குறைவு. அதுபோலவேதான் நோன்பு களால் உடலை வருத்தும் சமய நெறிகளைச் சார்ந்து நிற்பதும் எளிதன்று. அவை உடலையும் உயிரையும் வருத்துவன: விளையும் பயனும் தெளிவானதன்று. கனி, எளிதில் கிடைப்பது, வலியக் கிடைப்பது; தொட்டால் சாறு கிடைக்கும்; ஆண்டில் இளையவரும் உண்ணலாம்; முதியவரும் உண்ணலாம்; தானே கனிந்ததானமையால் சுவை