பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

மூலம் அறம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. ஆதலால், கரவாது ஈவார்கண் இரப்பது முற்றிலும் தவறன்று.

ஆனால், அப்பரடிகள் பாழூரில் பிச்சையெடுத்து அல்லற்படும் அவலத்தை எடுத்துக் கூறி விளக்குகின்றார். ஊரோ பாழூர்! ஆங்கு பொருள்வளம் இல்லை! உருவத்தால் மனிதர்கள் வாழுகிறார்கள்! உள்ளத்தால் கொடிய விலங்குகள் அனையர் வாழுகிறார்கள்! ஆங்கு ஆள் வினையும் இல்லை; ஒயாது உழைத்திடும் இயல்பும் இல்லை; உறுபொருள் ஈட்டுதலும் இல்லை; அன்பும் இல்லை; ஆர்வமும் இல்லை; இடிந்த வீடுகள்; ஓட்டைக் கூரைகள்! ஒட்டிய வயிறுகள்! ஒளியிழந்த கண்கள்! கபடு நிறைந்த கன்றிய நெஞ்சங்கள்! விரோத மனப்பான்மையுடன் வீண்வம்பு விளைவித்திடும் நரியனையார்! அழுக்காற்றுப் பிண்டங்கள் இன்னும் எப்படி எப்படியோ கூறலாம்! "பாழ்" என்ற சொல்லில் அனைத்தும் அடங்கும். பாழ்பட்ட பொருள், தான் பயன்படாததோடன்றிப் பிறிதொன்றையும் பயன் பயன்படாதபடி தடுக்கும். இத்தகு பாழூரில் பிச்சையெடுக்கப் போகும் மனிதனின் பேதமையை என்னென்பது? பிச்சை போடுவார் யார்? பல ஊர்களில் கெட்டவர்களாகப் பலர் இருந்தாலும், சிலராவது நல்லவர்களாக வாழ்வார்கள். அத்தகு ஊரில் ஒருவரிடம் இல்லையானாலும் பிறிதொருவரிடம் வாங்கலாம். ஆனால், அப்பரடிகள் காட்டும் ஊர் பாழூர்! ஆங்கு வாழும் அனைத்து மனிதரும் பாழ்! அந்த ஊரில் ஆசை மிகுதியால் பிச்சையெடுக்கப் புகுந்து அலைந்தவன் அடையும் அவலம் கொடிது! கொடிது! அதுபோல் தொழுதகைத் துன்பம் துடைத்திடவும் இருளகற்றி இன்பம் வழங்கிடவும் தந்தையாய், தாயாய், இன்னுயிர்த் தோழனாய் துணை நின்று தண்ணளி செய்து அருளாரமுதத்தை வாரி வழங்கி இன்புறுத்தும் தலைவனாம் ஈசனில்லாத சமண் சமயத்தின் அனுபவம் அப்பரடிகளுக்குப் ‘பாழூரை நினைவுபடுத்தியிருக்கிறது. “யாரொடு நோகேன்;