பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

203


தாகக் கருதி மயங்கி அறிவிழந்து பொறிகளின் ஆதிக்கத்திலிருக்கும் இந்த உடம்பைப் பேணிப் பாதுகாக்கின்றது. காலம் தவறாமல் உணவு வழங்கியும், நோய்க்கு மருந்து கொடுத்தும், இன்னும் என்னென்னவோ எடுபிடிகள் எடுத்தும் உடலைப் பேணத்தான் செய்கின்றோம். இந்த உடம்பின் மீது ஓர் ஈ, கொசு உட்காரத் தாங்கினோமோ, என்ன? அவ்வளவு பாதுகாப்பு! எனினும் இந்த வீடு காலி செய்யப் பட வேண்டிய ஒன்றே. நாமாகக் காலி செய்தாலும் பரவாயில்லை. நமக்கு உணர்வில்லாமலே மயங்கிய நிலையில், பேணிய உடம்பினின்று பெயர்ந்து நகர்கின்றோம். எங்கு நகர்வது? ஆயுட் கால முழுவதும் அண்டி இச்சை முகம் காட்டிச் சுரண்டிப் பிழைத்த பொறிகளாகிய வாணிகர்களையும் இப்பொழுது காணோம். தத்துவங்களும் மயங்கிக் கிடக்கின்றன. அதன் காரணமாக அறிவும் வேலை செய்யவில்லை; உணர்வும் வேலை செய்யவில்லை! நம்முடைய நிலை வலிவற்றுப் போயிற்று! உழைத்து ஊட்டி வளர்த்த பொறிகள் கைகொடுக்கவில்லை; மயக்கம் போடுகின்றன. எங்கும் இருள்! என்ன செய்வது நம்மால் ஒன்றும் ஆவதற்கில்லை! இறைவனுடைய கருணையே வலிய வந்து எடுத்தாள வேண்டியதிருக்கிறது.

திருக்கொண்டீச்சரத்து இறைவன் நம்மை எடுத்தாள் பவன். அவன் விண்ணுயர்ந்த நிற்கும் திருக்கோயிலை உடையவன். அவன் திருக்கோயிலின் உயரம், எடுத்தாளும் கருணைக்கு எடுத்துக்காட்டு. உலகின் எந்த திசையிலும் நின்று நிலவும் உயிர்களையும் வானுயர்ந்து நின்று அழைக்கும் அவனது கருணையின் சின்னமே, அணி செய்து நிற்கும் கோபுரம், அவன்றன் அழைப்பை அலட்சியம் செய்யக்கூடாது. அந்த அருளழைப்பை ஏற்று அவனுடைய திருவடியைச் சார்ந்து பீடுசால் பெருமை பெற்று வாழவேண்டும். அப்பொழுதும் பொறிகளுக்கு இழப்பில்லை. மாறாக நிறைதல் இன்பம் அவைகளுக்குக் கிடைக்கின்றன.