பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நுகராத மணத்தை நுகரவும், காணாதன காணவும், கேளாதன கேட்கவும், வாய்ப்பு ஏற்படுகிறது. உலகியலைத் துய்க்கும் பொறிகள் அழிந்து போகின்றன. திருக்கொண்டீச்சரத்தான் திருவடியைத் துய்க்கும் பொறிகள், திருவருளைத் துய்க்கும் பொறிகளாகின்றன. ஆதலால், வறிதே பாழாகாமல் வாழ்வாங்கு வாழத் திருக்கொண்டீச்சரத்தான் திருவடிகளைப் பேணுவோம்.

சானிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து
பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே
                                                   - அப்பர்

10. எங்ஙனம் கூடுவது?

அப்பரடிகள், இறைவனைத் தெளிந்து கண்டு துய்த்த சிவஞானச் செல்வர். அவருடைய பாடல்கள் சிவஞானத் தெளிவு. அத்தகு அப்பரடிகளே, பல இடங்களில் எங்ஙனம் இறைவனைக் காண்போம்? என்று ஏங்கிப் பாடுகின்றார். உலகியலானாலும் சரி, அருளியலானாலும் சரி, இன்பம் தருகின்ற ஒன்று மேலும் அன்பினைப் பெருக்கி வளர்க்கும். உலகியல் காதலின்பமும் இத்தகையதே! அருளின்பம் அதனினும் ஆராத தன்மையுடையது! அதனாலன்றோ இறைவனை ’ஆரா அமுது’ என்று அருளாளர்கள் பாடிப் பரவுகின்றார்கள்! இங்ஙனம், சிவத்தில் திளைத்த சிந்தை யுடையோரே ஏங்கியும், அழுதும் பாட, இன்று அதன் நுழைவாயிலிற்கூட அடியெடுத்து வைக்காதவர்கள் ’காட்டு’ என்று கேட்கிறார்கள், பிறிதொருவர் ’காட்டுகிறேன்’ என்கிறார்! இஃதென்ன, விளையாட்டுப் பொருளா? அல்லது வேடிக்கைப் பொருளா? அல்லது சந்தையில் கொள்முதல் செய்யும் காய் கறியா? புற்றாக, மரமாக வடிவம் மாறும் வரையில் கொடுந்தவம் இயற்றியவர்களும் அல்லற்பட்டி