பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துய்த்தல் பேரறிவாளர்கள் இயல்பு. அப்பரடிகளே, “உணர்வு அவன் காண்” என்றும், “உணர்வாய் நின்ற திருவனே” என்றும், “உணர்வெலாம் ஆனானே” என்றும் “உற்றிருந்த உணர்வெலாம் ஆனானே’ என்றும், “ஊனாகி, உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி” என்றும் அருளியுள்ள அடிகள் உணரத்தக்கன. இங்ஙனம் உள்கி உணர்வாகிக் காணக் கூடிய இறைவனை அப்பரடிகளும் உள்கி உருகிக் காண ஆர்வம் காட்டுகிறார். ஒரு பொருளை நினைத்து உள்குதற்கு அந்தப் பொருளிடத்தில் பற்று வேண்டும். பற்றுகள் பலவும் தீது என்று பேசிய வள்ளுவர் இறைவனுடைய திருவடியைப் பற்றுதலை மட்டும் நன்றென்று காட்டிப் “பற்றுக’ என்றும் ஆற்றுப்படுத்தினார். -

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு,

என்று பேசுகிறது குறள்.

அப்பரடிகள் இறைவனை உள்கி அன்பின் மிகுதியினால், நினைந்து நினைந்து உருகுகிறார். அடிகள் தம் நெஞ்சத்தில் இறைவனை நினைந்த அன்பு ஊற்றெடுக்கிறது. அதன் காரணமாக அடிகள் உள்ளம் உருகுகிறது. அன்பின் பெருக்கமும் உள்ளத்தின் உருக்கமும் இறை காட்சிக்கு இன்றியமையாதன. ஆற்றல் மிக்க அன்பால் நெஞ்சுருகி நினைப்பதன் மூலம்தான் இறைவனைக் காண முடியும். இஃதன்றிக் கூர்ந்த பகுத்தறிவோ, வாதிடும் திறனோ, சாத்திரத் தொகுப்புகளோ சாட்சியங்களோ கூட இறை வனைக் காணத் துணை செய்ய முடியாது. ஏன்? இறைவனிடத்து அன்பும் உருக்கமும் இல்லாத தவமும் கூட இறைவனைக் காணத்துணை செய்யாது. அப்பரடிகள் நெஞ்சத்தில் அன்பு பெருக்கெடுத்து ஊறுகிறது; தன்னுாற்றாகத் தடைப்படாது பெருக்கெடுத்து ஊறுகிறது. இதனை,