பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


11. தடை செய்து ஆட்கொண்ட தண்ணளி!

அப்பரடிகளை இறைவன் நாடறியச் சூலை மூலம் ஆட்கொண்டார். இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு அப்பரடிகள் இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து நாடு முழுதுமுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று, உருகிப்பாடி வழிபட்டு வருகின்றார். திருவருளின்பம் ஆராத் தன்மையது. ஆதலால், மேலும் மேலும் இன்பமுற வேட்டு நைந்து பாடுகின்றார். சிலபொழுது, இன்ப அன்பு மேலும் முறுகி வளரும் நோக்கத்துடன், இடையறவு படும்பொழுது துடிதுடிக்கும் உள்ளத்துடன் அழுது பாடுகின்றார்.

திருக்கச்சியேகம்பத் திருத்தலத்தில் அப்பரடிகளுக்கு இன்பத்தில் இடையறவு ஏற்பட்டிருக்கிறது என்று ஆங்கு அருளி செய்த பதிகத்தின் மூலம் உணர முடிகிறது. முதற்பாட்டிலேயே, “செய்ய வேண்டிய பணிகளிலிருந்து தவறினால், புளியம் விளாறினால், இறைவன் மோது விப்பான்” என்ற குறிப்பிற் பாடுகின்றார். “புளியம் விளாறினால், மோதுவித்த பின் உகந்தும் மகிழ்விப்பான்” என்றும் பாடுகின்றார்.

இந்தப் பதிகத்தில் இம்மாதிரி ஏராளமான செய்திகள் பேசப்படுகின்றன. உயிர்களிடத்தில் அன்பினைத் தழைக்கச் செய்து, அதனை நுகர்ந்து அனுபவிக்கும் இயல்பினன் இறைவன். சிறந்த அன்பு, தடைகளால்தான் தழைத்து வளரும். தரங்குறைந்த பெயரளவில் அன்பு என்று மினுக்குவது தடைகளால் தடைப்படும். ஆதலால், இறைவனும் உயிர்களிடத்தில் செயற்கையில் தடைகளைத் தோற்றுவித்துத் தடைகளைத் தாண்டி வளரும் அன்பினைத் தழைக்கச் செய்து வளர்க்கின்றான். இங்ஙனம் செய்யும் இயல்பினனாக இறைவன் இருப்பதை, நினைத்து பாடுவதால், அத்தகைய ஒரு