பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டறிந்து அவற்றிற்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுளை அறிதலே, அறிவில் முதிர்ந்த ஞானம். இதனை விளக்கத்தான் போலும் பரப்பில் பெரிய திருக்கோயிலை எடுத்து வாயில்கள் பல அமைத்து அத்திருக்கோயிலினூடே பரப்பில் மிகச் சிறிய ஓரிடத்தில் கூர்ந்த கவனத்திற்குரியதாக எம்பெருமானை எழுந்தருளச் செய்தனர்! அறிவுப் புலன் ஆழமும் அகலமும் உடையதாக வளர்ந்து, பின் நுண்மாண் நுழைபுலமாக வளர வேண்டுமென்பதே வாழ்வியல் நியதி.

அறிவின் தெளிவில்லாத இடத்தில் கடவுட் சார்பு இருக்கும் என்பது நம்பமுடியாத ஒரு செய்தி. வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். அதுவும் அச்சத்தின் பாற்பட்டதாகவோ, அல்லது வழக்கத்தின் பாற்பட்ட தாகவோ இருக்கலாம். கடவுட் சார்புடைய வாழ்க்கை அச்சத்திற்கு முரணானது. ஆங்கு அஞ்சாமையே நிலவும்.

“அஞ்சுவது யாதொன்றும் இல்லை” என்பது அப்பரடிகள் வாக்கு. ஆதலால், இந்த உடம்பு உயிர்க்குக் கிடைத்த ஒப்பற்ற கருவி. இக்கருவியை முறையாகப் பயன்படுத்தி உயிர் பயனடைதல் வேண்டும். உயிரடையக் கூடிய பயன்நிலை பேறுடையதாகவும், இன்பம் தருவதாகவும் இருக்க வேண்டும். அதற்குரிய ஒரே வழி, அறிவிற்கறிவாக விளங்கும் அரனை வழிபடுதலாகும். வழிபடுதலென்பது, இன்று பெரும்பாலும் வையகத்தில் இல்லை. ஓர் உயிர், ஒன்றில் அகமும் புறமும் ஒன்றெனக் கலந்து, ஒன்றாகிச் செய்தலே வழிபாடு.

உயிரின் இயல்பு ஒன்றைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல் ஆகிய ஐந்து செயல்களின் வழியாகவே முழுத்தன்மை அடைய முடியும். அஃதின்றிக் கடையில் தேங்காயை வாங்கிக் கொண்டு போய்க் குருக்கள் கையில் கொடுத்து உடைக்கச் செய்து, வாங்கி வருதல் மூலம் பக்தியும் வந்துவிடாது; பயனும் வந்துவிடாது. கோயிலில்தான்