பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

213


தேங்காயை உடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அம்மியில் உடைத்தாலும் உடைபடும். அறிவு தொழிற்படும் பொழுதே, அனுபவம் கிடைக்கிறது.

அனுபவம் வந்த பிறகே அந்த அறிவு உயிருக்கு உடைமையாகிறது. அதுவரையில் அறிவிற்குத் தெரிந்த ஒன்று கூட அனுபவத்திற்கு வருவதில்லை; உடைமையாக மாறுவ தில்லை, அறிவு செயற்பாட்டின் மூலம்தான் சிந்திக்கும்.

இன்று நம்முடைய வழிபாட்டு முறைகள், மனித குலத்திற்கு வந்த சாதிப்பழக்க வேற்றுமைகள் மனித குலத்தை வழிபாட்டினின்று விலக்கியிருக்கின்றன. மனிதன் இன்றைக்கு திருக்கோயிலைக் காட்சிச் சாலையாகப் பயன்படுத்துகின்றானே தவிர, அவன் வழிபடுவதில்லை. வழிபாட்டுக்குரிய உரிமைகள் அவனுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் தகுதி வேண்டாமா? என்கிறார்கள் சிலர்.

தகுதி பெறத்தான் திருக்கோயிலுக்கு வருகிறோமே தவிர, தகுதி பெற்றதைக் காட்ட வருவதில்லை. எழுதிக் காட்டும் ஆசிரியன் எழுதுவிக்கவும் செய்தால்தான் அறிவு உரிமையாகிறது. அறிவியல் ஆய்வுச் சோதனை செய்யும் ஆசிரியன் மாணாக்கனையும் செய்யச் செய்தால்தான் மாணாக்கர்க்கு அறிவு கிடைக்கிறது. அதுபோலத்தான், வழிபாடு செய்து வைக்கும் அர்ச்சர்கள் வழிபாடு செய்யச் செய்தால்தான் வழிபாட்டின் பயன் கிடைக்கும்.

இதுவே காலத்திற்கு முந்திய ஆன்றோர் வழக்கு. இடையில் புகுந்த சாதி முறையும் தொழில் முறையும் இந்த இனிய வழக்கத்தைக் கெடுத்துவிட்டன. ஆதலால், உண்மையான வழிபாடு உயிர்கள் செய்வதில்லை. உண்மையான வழிபாடு செய்யாமையின் காரணமாக உயிர்கள் அடைய வேண்டிய வழிபாட்டின் பயனாகிய பேரறிவும் பேராற்றலும் கிடைக்கப் பெறவில்லை. ஏதோ பழக்கத்தின் காரணமாகச் செய்கிறான். நனைய வேண்டிய இடத்தில் நனையாமற்