பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குளிக்கிறான். தோய வேண்டிய இடத்தில் தோயாமல் தொங்குகிறான். ஒன்றித்துக் காதலிக்க வேண்டிய இடத்தில் ஒதுங்கி நிற்கிறான். மிகச்சிறந்த உயிரறிவின் ஒளிவிளக்காகத் திகழ வேண்டியவன் முட்டாளாகப் பெயர் சூட்டிக் கொள்கிறான்.

வழிபாடு ஓர் அறிவியல் சாதனை அதன் பயன் பொய்யன்று. இன்று அது பலருக்குப் பொய்ம்மையாக விளங்குகிறது. காரணம் பொய்யுடைய மனிதர் கையில் அது சிக்கியதேயாகும்.

வழிபாடு அறிவின் விளக்கமாக அமைந்தது. ஆனால் அஃது இன்று முட்டாள்தனமாகக் காட்சியளிக்கிறது. பலர் அதை அப்படியே ஆக்கிவிட்டனர். சிந்திக்க வேண்டியது சிலையின் அடியிலுள்ள எழுத்துக்களையல்ல. இந்த எழுத்துக்களைத் தோற்றுவிக்கக் கூடியவாறு, நம்முடைய கடந்த காலச் சமய வாழ்க்கை அமைந்திருக்கும் கால நிலையை எண்ணி நோதல் வேண்டும். எல்லாமாய் அல்லதுமாய் விளங்கும் பெருமானைக் காப்பாற்ற மட்டும் திருக்கோயில்கள் அல்ல. உயிர்களைத் தூய்மை செய்து பேணி எடுத்து வளர்க்கவே திருக்கோயில்கள். உயிர்களிடத்தில் அன்பு ஊற்றினைக் காணவே திருக்கோயில்கள். அந்த ஊற்றின் முன்னே கடவுள் குழைந்து நிற்கிறான். அதனைத் துய்ப்பதில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவனுடைய அருள் வெளிப்பாடு அங்கேயே பூரணத்துவம் பெறுகிறது.

மனிதனை மிருகமாக்கி, வேறுபாடுகளை நிரந்தரப் படுத்துவது இறை நெறியாக இருக்க முடியாது. பாவியே ஆனாலும் அவன் மாட்டு இறைவனுக்குள்ள கருணை இம்மியும் குறையாது. தூய்மை என்பது, சாதி முறைகளைக் காப்பாற்றும் கண்ணாமூச்சி விளையாட்டே தவிர, அதில் உண்மை இருக்க முடியாது. உடலால் தூய்மையற்று உள்ளத்தால் தூய்மையுடையோர் இல்லையா? உள்ளத்தால்