பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிவஞானம் கலந்த பாலூட்டப் பெற்ற குழந்தை. மனம் வாக்குகளுக்கு அப்பாற்பட்ட கடவுளைக் கைவிரலால் சுட்டிக்காட்டி,

தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடியூசி என்
உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்
தேத்த அருள் செய்த
பீடுடைய பிர மாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே!

என்று அம்மையப்பனை அடையாளம் காட்டிய குழந்தை. உமையம்மையார் ஊட்டிய பால் பைந்தமிழ்க் கவிதைகளாக மலர்ந்தன. தமிழ்நாடு முழுதும் உள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று, ஞானத் தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவினார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரின் தமிழ், வெல்லும் தமிழ், நீரையும் நெருப்பையும் வென்று விளங்கிய தமிழ். சாம்பலை, பூம்பாவையாக்கியது திருஞானசம்பந்தருடைய அருந்தமிழ். திருஞானசம்பந்தர் தாம் அருளிச்செய்த பதிகங்கள்தோறும் கடைக்காப்புப் பாட்டில் பதிகம் ஓதுதலின் பயன் என்ன என்பதையும் அருளிச்செய்கின்றார். ஏன்? திருஞானசம்பந்தரின் தமிழ், அவர் தன்னிச்சையாகத் தந்ததல்ல. திருஞானசம்பந்தர் தம்மைத் “தன்னிகரில்லாச் சண்பையர் கோன்” என்று கூறிக்கொள்வதைக் காண்க. திருஞானசம்பந்தரிடம் தன்முனைப்பு இருந்ததில்லை. சிவமாம் தன்மை பொருந்தியவர். ஆதலால் பதிகம் பயன் கூறியது ஏற்புடையதேயாம்.

மனிதன் சிந்திக்கும் இயல்பினன். சிந்தனை சிறந்தால் மனிதன் வளர்வான். மனிதனின் சிந்தனை அன்புடையதாக