பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விலங்குகள் போலல்லாது மனித குமுகாயத்தை ஒரு கூட்டு வாழ்க்கையாக இயற்கை அமைந்துள்ளது. மனித குமுகாயத்தில் அரக்கனைத் தவிர, தனி மனிதனே இல்லை! ஞானியானால் இறையுடன் தோழமை கொண்டு ஒன்றிக் காதலித்து இன்புறுவர். அவர்களுக்கும் இறைவன் என்ற ஒரு தோழனுண்டு. இவன் அவனைக் காதலிக்க, அவன் இவனைக் காதலிக்க மிகப் பெரிய ஞானக் காதல் வாழ்வு மலர்கிறது.

எனவே, மனித உயிர் குறைகளினின்று விடுதலை பெற அன்பினாற் கலந்த உறவு தேவை. உறவு தோன்றி வளர்தற்குரிய சூழ்நிலைகள் பலவற்றுள் பலர் ஒருங்கிருந்து உண்ணும் சூழ்நிலையே சிறப்புடைய சூழ்நிலையாகும். அதனாலேயே வள்ளுவம், பகுத்துண்ணலைத் தொடர்ந்து “பல்லுயிர் ஒம்புதல்” என்று பேசியது. திருமுறைகளும், திருக்குறளும், விருந்தோம்புதலை நெறிகளுக்கெல்லால் உயர்ந்த நெறி என்று எடுத்தோதுகின்றன.

மனித உறவுகளுக்குக் கொடிய பகையாகிய அழுக்காறு, பிற கட்டங்களில் தலை காட்டுதல் போல உண்ணும் பொழுது தலைகாட்டுதல் இயலாது. அளவுக்கு மிஞ்சிக் குவித்து வைக்கின்ற செல்வத்தைப் போலல்லாமல் யாரும் அளவோடுதான் உண்ண இயலும். ஆதலால் அழுக்காற்று உணர்வு தடை செய்யப்படுகிறது. அதோடு பிற கட்டங்களில் மனிதன் தன் மகிழ்வுணர்வைப் பூரணமாக வெளிப்படுத்தி விடுவதில்லை. உண்ணும்பொழுது தன்னுடைய நிறைவை அகன்ற ஒளிபடைத்த கண்கள் மூலமும், மகிழ்வு கொப்பளிக்கின்றதை முகத் தோற்றத்தின் மூலமும், சுவைத்து மகிழ்ந்தமையை உதடுகளில் பொங்கி வழியும் புன்னகை மூலமும் யாதொன்றும் தடை செய்ய முடியாவண்ணம் வெளிப்படுத்துகிறான். இத்தகைய சூழ்நிலையில் உறவு கலத்தலைப் போலப் பிற சூழ்நிலைகளில் முடியாது.