பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

221


கின்றனர்? காசிக்குச் செல்லுகின்றனர்! இதனை அப்பரடிகள் கண்டிக்கின்றார்.

கெட்ட புத்தியால் ஆற்றில் ஒரு பொருளைக் கெடுத்து விட்டு அந்தப் பொருளைக் குளத்தில் சென்று தேடினால், கிடைக்குமா? ஒரு பொழுதும் கிடைக்காது. சுந்தரருக்குக் கிடைக்கவில்லையா? என்று கேட்கத் தோன்றும். சுந்தரர் ஆற்றிலே பொன்னை, இறைவன் ஆணைப்படி போட்டவர்; கெடுத்தவரல்லர்.

ஆற்றில் போடுதலுக்கும், கெடுத்தலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதுவும் துர்மதியால் கெடுத்தது என்பது அப்பரடிகள் வாக்கு. மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்து அனுபவிக்க வேண்டும் என்று மடியில் மறைத்தது துர்புத்தி, அப்படியே ஆற்றில் இறங்கும் பொழுது அந்தப் பொருள் கெட்டுப் போகிறது. அதை எப்படி குளத்தில் எடுக்க முடியும்? அதுபோலச் சிலர் இறைவனை உள்ளூரில் நன்றாகக் கும்பிட்டால் மற்றவனும் கும்பிட்டுவிடுவானே என்றஞ்சி அயலூர்களுக்கே கும்பிடப் போவதுண்டு.

இறைவன் எங்கும் இருக்கிறான். நம்மூர்க் கோயிலில் இருக்கிறான்; பூசனை இல்லாது பூட்டப் பெற்ற கோயிலுக்குள்ளும் இருக்கிறான். கதவைத் திறவுங்கள்; அன்போடும் ஆராக் காதலோடும் அவனோடு பேசுங்கள்: மலர்ந்த மனத்தைப் பேசிக் காட்டும் மலர்களைத் தூவுங்கள்; உணர்வின் சின்னமாக-உருக்கத்தின் வெளிப்பாடாகத் திகழும் கண்ணீரால் முழுக்காட்டுங்கள்; கண்ணீர் வர மறுத்தால் குடங்களால் நீர் முகந்து ஆட்டுங்கள். காலத்திற்குக் காலம் கனிந்து கண்ணீர் வரும். இறைவனைக் காணலாம். அதனை விடுத்துக் காற்றிலும் கடிய வேகத்தில் உலகெல்லாம் திரிந்து இறைவனைக் காணமுயல்வது ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய அறியாமையோடொக்கும்.