பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மன்றம் பலர் கூடுமிடம். ஆங்கு நிழல் தருவதற்காக மரங்கள் வைக்கப் பெற்று வளர்ந்திருக்கும். நிழலில் கூடியிருந்து மகிழ்ந்தவர்கள், நிழல் தந்த மரங்களைப் பேணுவதில்லை. பேணாதது மட்டுமின்றித் தேவைக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகக் கொம்புகளை ஒடித்துச் சேதப் படுத்துவர். தொங்கும் கிளைகளை மாடுகளும் கடித்து மேய்ந்து அழிக்கும். நோய் தரும் பூச்சிகள் ஒட்டி, மரங்களை உருக்குலைக்கும்.

இங்ஙனம் மன்றத்தில் நின்ற மரமாயினும் மன்பதைக்குப் பயன்பட்டதாயினும் அம்மரம் பேணுவாரின்றி பெருந்துன்பமே உறுகின்றது. காரணம், மன்றத்தில் நின்ற மரம்! வீட்டகத்தே நின்ற மரமாக இருப்பின் எங்ஙனம் பேணுவர் என்று எடுத்து எழுதவும் வேண்டுமோ? தாம் வளர்த்ததாக இருப்பின் நச்சு மரமேயானாலும், கொல்ல மாட்டார்கள் என்று மணிமொழி பேசுகிறது. வளர்த்த பாசம் அத்தகையது! மன்றத்தில் நிற்கும் மரமும்-பொது இடத்தில் நிற்கும் மரமும் படும் துன்பத்தைத் துன்பத்திற்கு எல்லையாக எடுத்துக் காட்டுகிறார், அப்பரடிகள். ஆதலால் அப்பரடிகள் காலத்தும் பொதுமையுணர்வு தோன்றவில்லை. பொதுவுரிமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு வளரவில்லை எனலாம்.

தனியுரிமையும், தனி மனிதவுணர்வும் நஞ்சென வளர்ந்து மனித சமுதாயத்தை அரித்துக்கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை யான், எனது’ என்ற இரண்டு 'இடி'களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ‘யா'னிலும் 'ஒரு மனித' னிருக்கிறான். 'நா'மிலும் ஒரு மனிதனிருக்கிறான். 'என' திலும் 'ஒரு மனித'னுடைய உணர்வு இருக்கிறது. 'நமதிலும்' ஒரு மனிதனுடைய உணர்வு இருக்கிறது. ஆனால், இரண்டிற்குமிடையேயுள்ள வேற்றுமை ‘யான், எனது வெறுப்பை வளர்க்கிறது; பகையை வளர்க்கிறது; பாதுகாப்பின்மையைத் தோற்றுவிக்கிறது. 'நாம்',