பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

225


‘நமது என்ற உணர்வு, அன்பைப் பெருக்குகிறது; உறவை வளர்க்கிறது; பாதுகாப்பைத் தருகிறது.

தனியுரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொதுவுரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும் வழி வழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளரவில்லை. 'யான்’, ‘எனது என்ற உணர்வு மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனிமனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்துவிட முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என்? தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும் சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது.

மனிதன், ஒன்றில் ஒன்றவேண்டும். அந்த ஒன்று கடவுள். எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்! அவன் “இவனுமல்லன்; அவனுமல்லன்” அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்பரடிகள் பாராட்டுகின்றார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும்! “ஞாலமே விசும்பே, இவை வந்து போம் காலமே!” என்று மணிமொழி பேசும். அந்த ஒன்றில் வேறுபாட்டுணர்வு அற்று ஒன்றிக் கலந்தால் துன்பம் வராது என்ற கருத்தை அப்பரடிகள் இனிது விளக்கிப் பாடுகின்றார். அதாவது, தனிமை துன்பம் தரும்; பொதுமை இன்பம் தரும். கடவுள் ஒன்று, அதுவே, உலகத்திற்கு ஒன்று. அந்த ஒன்றை ஒன்றியிருந்து நினைத்தால் இன்புறலாம் என்பதாகும்.

மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி
ஒன்றினா லுணரமாட்டே னுன்னையுள்
வைக்கமாட்டேன்

கு. இ. VII.15.