பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருஞானசம்பந்தர்
19
 

அமையவேண்டும். மானுடத்தின் உயிர்நிலையே அன்புதான்! “அன்பின் வழியது உயிர்நிலை” என்றார் திருவள்ளுவர். “அன்பே சிவம்” என்றார் திருமூலர். அடியார்கள் என்றும் எப்பொழுதும் அன்புறு சிந்தையுடையவர்களாக இருப்பர்; சிவனை, எம்பெருமானைக் கூடும் அன்பினில் கும்பிடுதலையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். இன்ப வடிவினராகித் திருநல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவடிகளைப் போற்றுவர். சிவன் - அவனை அன்புறு சிந்தையில் கொண்டு விளங்கும் நாயன்மார்கள் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொள்வர். எத்தொண்டு செய்தாலும் சிவனுக்கெனவே செய்வர்; பயன் பற்றிக் கருதார்; அதனால் துன்புறுதல் இலர். துன்பம் என்பதே ஒன்றை விரும்பும் பொழுதுதான் வருகிறது. விருப்பத்தைக் கடந்த நிலையில் சிவ சிந்தனையுடன் தொண்டு செய்தால் துன்பம் வருவதில்லை.

இன்று அன்புறு சிந்தையர் அருகிவரும் நிலை. எங்கும் எதிலும் வாணிகப் போக்கு! ஒரு காலத்தில் தொண்டாக விளங்கிய பணிகள் பலவும் இன்று தொழிலாக மாறிவிட்டன! இன்று திருக்கோயில்களில் திருமடங்களில் கூடத் தொழிலாளர்களே உள்ளனர்; தொண்டர்கள் இல்லை. அதனால், தொழிலுலகத்திற்குரிய பணி நிறுத்தம் முதலியன திருக்கோயில்களுக்கும் வந்துவிட்டன; தொண்டு செய்தல் மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரின் கடமையாகும். தொண்டர்கள் பெருகி வளர்ந்து தொண்டு சிறந்தால்தான் இந்த வையகம் துன்பத்தினின்றும் நீங்கும்; இன்புறும்; மானுடமும் வழிவழி சிறந்து விளங்கி வாழ இயலும். இத்தகு தொண்டு அருகிப் போனமையால் இன்று எங்கும் துன்பம்! காவல் நிலையங்களும் சிறைச்சாலைகளும் ஆட்சி அதிகாரச் சட்டங்களும் பல்கிப் பெருகி வளர்வதன் காரணம் தொண்டு செய்வோர் குறைந்து போனதல்ல. இல்லாது போனதுதான்; ஒரோவழி “தொண்டின் புனைவில்” விளம்பர வாணிகம்