பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
226
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

கன்றிய காலன்வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினா னலமந்திட்டே னதிகைவி ரட்டனரே,

என்பது அப்பர் திருப்பாட்டு.

16. உழுத சாலிலேயே உழுதல்

நெஞ்சம் விந்தையானது. அலைகடலையும் நெஞ்சத்தையும் ஒப்பிடலாம். அலைகடலில் எண்ணத் தொலையாத அலைகள் உண்டு. அது போல, எண்ணத் தொலையாத ஆசை அலைகள் நெஞ்சில் உண்டு. அலைகளின் எண்ணிக்கை பலவானாலும், அவை புதிய வண்ணமும் வடிவமும் உடையன அல்ல; முன் பின் என்ற காலமாறுபாடேயாகும். உருத்தெழுந்து வந்த அலை, கரையில் மோதி அலையென்ற வடிவமிழந்து, பெயரழிந்து ஆங்காரமடங்கிக் கரையால் எதிர்த்துத் தாக்கப் பெற்று உருக்குலைந்து கரைந்து தண்ணீராகக் கடலில் கலக்கிறது. மீண்டும் அத்தண்ணீர்த் துளிகளே காற்றழுத்தத்தின் துணை கொண்டு அலையாகி மோதுகிறது. ஆக வடிவத்திலும் மாறுதலில்லை; செயலிலும் மாறுதல் இல்லை. அதுபோலவே ஆசை அலைகள் நெஞ்சில் எழுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தாலும் ஆசைகள் புதியன அல்ல, பழைய சுயநலமேதான்! பழைய சுயநலம் மாறிப் புதிய பிறர் நலமாக இருப்பின் குணம் மாறும் பயன் விளையும். ஒருக்கால் சுயநலமும் காப்பாற்றப் பெற்றாலும் பெறலாம்.

இந்த நெஞ்சு, அறியாமைத் தன்மையுடையது. அதற்கு ஆய்ந்தறியும் அறிவுணர்வை விட வழக்கம்தான் பெரிது. அது, இன்று புதுப்பாதை போடாது. நேற்று நடை பயின்ற பாதையிலேயே செல்லும்; அந்தப் பாதை நாற்றமுடையதாக இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டாவது அந்தப் பழைய பாதையில் செல்ல வழி நடத்துமே தவிர, எளிதில் வழக்கத்தை மாற்றாது. நெஞ்சம், ஆசைகளின் ஊற்றுக்களன்.