பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
233
 

வளர்கிறான். காலம் அருமையானது. சென்ற காலம், நிகழ் காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலமும், எதிர் காலத்தை உருவாக்குகிறது. இந்த உலகில் எந்த ஒன்றையும் மனிதன் படைத்துக் கொள்ள முடியும். ஆனால் புதியதொரு காலத்தை அவன் படைத்துக் கொள்ள முடியாது. அது போலவே மனிதன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது.

வாழ்நாள் பல வினாடித் துளிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வினாடித்துளியும் கழியும்போது உயிர்வாழ்க்கை கரைகிறது; மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மகிழ்விலேயே ஈடுபடும் மனப்போக்குடைய நாம் மரணத்திற்கு அஞ்சுவதால்-அயர்ந்து மறந்து விடுகிறோம். நாம் அறிந்துகொண்டாலும் சரி, அறியாமல் போனாலும் சரி, உணர்ந்தாலும் சரி, உணராமல் போனாலும் சரி வாழ்நாள் கரைந்தே போகிறது. எப்படி முயன்றாலும் வாழ்நாள் கரையத்தானே செய்யும். அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன? என்று கேட்கலாம். ஆனால் வாழ்நாளை முற்றிலும் முழுதுமாகப் பயன்படுத்தினால் அது கரைந்து அழிந்ததாகக் கருதமுடியாது. வள்ளுவரும் “உளதாகும் சாக்காடு” என்பார். காலம் விரைந்து செல்லக்கூடியதே. அதனைத் தடுத்து நிறுத்துதல் என்பது இயலாது. ஆயினும் காலத்தின் நோக்கம் பயன்படுதலேயாம். காலம் முழுதுமாகப் பயன் பட்டிருக்குமானால் அஃது அழிவன்று; ஆக்கமேயாம். மனித உலகத்திற்கு ஒவ்வொரு வினாடித்துளியும் பயன்பட வேண்டும்.

ஒரு மனிதன் தனக்குரிய பொருள், தனது வாழ்வுக்குரிய பொருள், பிறரால் அவனறியாமல் கொள்ளை கொள்ளப்படும்போது களவு போய்விட்டது என்று கூறுகிறான். இத்தகைய களவு, உடைமைகளுக்கு மட்டும் தானா? காலத்திற்கும் உண்டு, அடிக்கடி சிலர் நேரம் போனதே