பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
234
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படிக் கூறும் பொழுது அவர்கள் இம்மியும் கவலைப் படுவதில்லை.

நம்மை அறியாமல் நமது செயலுக்கும் பயன்படாமல், பயன் தராமல் வாளா கழிகின்ற காலமும் களவு போனதாகவே கருதப்படும். இங்ஙனம் அப்படி அடிகளே கூறுகின்றார், “களவுபடாததோர் காலம்” என்பது அவர் வாக்கு! உடைமைகளைப் பாதுகாக்கும் கவலை இல்லையா? பூட்டும் சாவியும் தோன்றவில்லையா? கணக்குப் பார்க்கும் பழக்கம் இல்லையா? காலம் படைத்துத் தரும் உடைமைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுப்பவர்கள் ஏன் மூலப் பொருளாகிய காலம் பற்றிக் கவலைப்படாது இருக்கிறார்கள்? அதுதான் புரியாத புதிர்! உடைமை இழப்பு உடனடியாகத் துன்பம் தருவது. ஆனால் மனம் வைத்து முயன்றால் ஈடு செய்யவல்லது. காலத்தின் இழப்போ நெடிய துன்பத்தைத் தரவல்லது; ஈடுசெய்ய முடியாததும் கூட. ஆயினும் அதைப் பற்றி மனித உலகம் போதுமான கவலை காட்டுவதாகத் தெரியவில்லை. எப்படியும் மனிதனுக்குக் காலம் போற்றும் உணர்வு வேண்டும் என்பதற்காக வினாடி வரையில் பகுதி பிரித்துக் காட்டினார்கள். வினாடியைவிட்டால் நிமிடத்திலாவது முடித்துக் கொள்ளட்டும் என்றும் நிமிடம் குறைந்தாலும் மணிக்கணக்கில் தொலைக்காமல் இருக்கட்டும் என்றும் பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாள்கணக்கில், மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில்கூடப் பயனற்றுக் காலம் கழிவதை-இல்லை, அழிக்கப்படுவதை என்னென்று கூறுவது?

காலம் முழுமையாகப் பயன்படுத்தப் பட வேண்டும்; ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். காலம் சென்ற அடிச்சுவடு சாதனையின் மூலமாகத் தெரியவேண்டும். அப்பொழுதுதான் காலம் பயன்பட்டதாகும். அங்ஙனம் இல்லாமல் “நாளை” என்று கடத்தி வாழ்வதை இயற்கை ஒரு பொழுதும் மன்னிக்காது. அப்படிப்பட்டவனுடைய காலம் சைத்தனால் களவு கொள்ளப்படும். ஆதலால், உய்திக்குப்