பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

நடைபெறுகிறது. அது விளம்பரமே ஒழியத் தொண்டு அல்ல. தொண்டு என்பது அன்புறு சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்பெறுவது. அதனால்தான் அப்பரடிகள் “என் கடன் பணி செய்து கிடப்பதே!” என்றார். கிடப்பது அஃறிணையேயாம். அஃறிணைப் பொருள்கள் - குறிப்பாகத் தாவரங்கள், மானுடத்தின் வாழ்வுக்கு நிறைய உதவி செய்யும். ஆனால் எந்தப் பயனையும் திரும்ப எதிர்பார்க்கா. மழைக்கும் மரங்களுக்கும் நன்றி சொல்வார் யார்? ஆதலால் பயன் கருதாது தொண்டு செய்வோர் துன்புறமாட்டார்கள் என்பது திருஞானசம்பந்தரின் திருவுள்ளம்.

அன்பில் விளைவது நலம். நலம் வேண்டுவோர் அன்புடையராதலன்றி வேறு வழியில்லை. அன்புக்கு நலம் என்று கூறும் வழக்கும் உண்டு. மானிட வாழ்க்கையின் இயக்கத்திற்குப் பொறுப்புள்ள உறுப்பு சித்தம். ஆம்! சித்தத்தின் தொழில் சிந்தனை. சிந்தனையில் அன்பு இருப்பின் சொல், செயல் அனைத்தும் நலமாக அமையும். இன்று அன்புறு சிந்தையினரையும் காணோம். நலந்தரும் சிந்தையினரையும் காணோம். நாள்தோறும் அன்புக்கும் நலத்திற்கும் மாறுபட்ட நிகழ்வுகளே மிகுதியாக நடக்கின்றன. இவற்றைத் தவிர்க்கவும் மக்கள் சமுதாயம் அன்புறு சிந்தையுடையதாகவும் நலந்தரு சிந்தையுடையதாகவும் விளங்கத் திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைப் பாடல்கள் உதவும்.

இன்று எங்கும் பேச்சு! எப்போதும் பேச்சு! சொற்களை வழங்குவதற்கு யாரும் தயங்குவதில்லை. ஆனால் எல்லோரும் ‘சொல்’ தான் சொல்கிறார்கள். சொல்லப்பெறும் சொற்களுக்கு இலக்கணம் வேண்டாமா? பயன் வேண்டாமா? பயனற்ற சொற்களைக் கூறுவானைப் ‘பதடி’ என்றது திருக்குறள். இளங்கோவடிகள் “வறு மொழியாளர்” என்று திட்டினார். திருஞானசம்பந்தர் பயனற்ற சொற்களை நகைச்சுவை ததும்ப, “முட்டைக் கட்டுரை மொழிவ