பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
238
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

என்று அப்பரடிகள் முதற்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைத் தன் உயிருக்கு உயிராக எண்ணி உணர்தல் வேண்டும்.

இறைவனைத் தன் உயிரில் அறியும் தகுதியுடையவர்கள் உள்ளத்தில், இறைவன் தங்கி அருள்செய்வான்; அங்கனம் தன் உயிரில் இறைவனை அறியும் அறிவிலனாயின் அவனிடத்தில் தங்கி நிற்கும் இறைவனை அடைதற்கு இயலாதவனாகி அவலமுறுகின்றான்.

                தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
                தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
                தன்னிற் றன்னை யறியில னாயிடில்
                தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே!

என்பது அப்பர் வாக்கு.

தன்னில், தன்னுயிரில் இறைவனைக் கண்டு தொழுதல் இனியதவம். “விறகில் தீயினன்” என்பர் நமது அடிகள். விறகிற்குள்தான் சக்தி மண்டிக் கிடக்கிறது. மணியினுள்தான் மணியின் ஒளி கனன்று கொண்டிருக்கிறது. பாலினுள்தான் நெய் இருக்கின்றது. அதுபோல் ஊனில், ஆவியில் இறைவன் இருக்கின்றான். ஆங்கு அவனைக் கண்டு தொழாமல் - நெஞ்சத்தைக் கோயிலாக்காமல் புறத்தே தேடியலைவதில் பயனென்ன? இதனையே சித்தர் ஒருவர், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன் இருக்கையில்” என்று கூறினார். இதயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து பத்திமை செய்யும் தகுதியற்றவர்கள் திருக்கோயிலிலும் இறைவனைக் காண முடியாது. ஆதலால், மெய்ஞான நெறியில் வளர விரும்புவர்கள் இறைவனை உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி நினைக்கவேண்டும். அகப்பூசை செய்யாமல் புறப்பூசை செய்தலை அருணந்திசிவம், “கையிலிருக்கும் தேனைப் பருகாமல் முழங்கை வழியாக வழிகின்ற தேனைக் குடிப்பதற்கு முயற்சி செய்வது போல” என்று கூறுகின்றார்.