பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
241
 

22. அகப்பகையை வெல்க

மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல்கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்று இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல், நிழல்தானே! இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருத்தியது. 'சுறுக்’ கென்று தைக்கும் புறப்பகையைக் கடிதில் உணர்ந்த மனிதன், புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறி விட்டான்.

ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை; தீ, சுடுவதில்லை; கொடிய விலங்குகளும்கூட வருத்துவதில்லை. அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும், பலவற்றைப் பழக்கிய அவன், பழகத் தவறிவிட்டான். நாயினை நல்லவிதமாகப் பழக்கினான். ஆனாலும் அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது, புறப்பகையல்ல. அகப்பகையே யாகும். அழல் நெருப்பு அவனைச் சுடுவதில்லை. ஆனாலும், அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல், அவனை வருத்துவதில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும் அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.

இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலேயே மனிதன் பகைப் பலத்துக்கு ஆளாகமாட்டான். மனிதனின் வாழ்வில் படைக்கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை

கு. இ. VII.16.