பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


23. வாழ்வியல் இயக்கம்

வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தில் மனிதன், மா மனிதனாக, அதாவது முழு மனிதனாக வளர்ந்து உருப்பெறுகிறான். மனித வாழ்க்கையின் வளர்ச்சி ஒரு பரிணாம வளர்ச்சி! இந்த வளர்ச்சி தனி மனிதனாக நின்று ஒருவன் சாதித்துக் கொள்ளும் வளர்ச்சியல்ல! ஒருவனுடைய வாழ்க்கை முழுதான நிறை நல வளர்ச்சியை அடைய, பலர் உதவி தேவை.

ஆன்மா, உருவம் இல்லாதது. ஆனால் அறியும் உணர்வுடையது. ஆயினும் உருவம் இல்லாமையின் காரணமாக அறிவு இருந்தும் இல்லாத நிலை. எனவே, இயக்கம் இல்லை; வளர்ச்சி இல்லை. அறிவு நலம் சார்ந்த ஆன்மா, அறியாமையோடு பிணைப்புண்டு கிடக்கிறது. இயக்கமும் செயற்பாடும் இல்லையானால் அறிவுநலம் இல்லை; வளர்ச்சி இல்லை. உயிர் இருந்தும் இல்லாதது போல்தான். கோடையில் நீர்வற்றிக் கிடக்கும் குளத்தினால் யாது பயன்? கோடைக் காலத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மொட்டையாக நிற்கும் மரத்தினால் என்ன பயன்? இந்த நிலையில் திருவருளின் கண்ணோட்டம் உயிர்பால் வீழ்கிறது. ஒரு தலைமகன் வழி, உயிரின் இயக்கம் தொடங்குகிறது; வாழ்வு தொடர்கிறது.

ஆம்! ஒவ்வொருவர் வாழ்விலும் கிடைத்த முதல் துணை தந்தை; அப்பன்தான்! உயிர், அப்பனிடம் ஒராண்டு உற்றிருந்து ஜவ்வரிசி அளவு வடிவமுள்ள ஒர் உருப்பெற்றுப் பயணத்தைத் தொடங்கி, தாயின் கருப்பையைச் சென்று சேர்கிறது. முதற்பயணதில் கிடைத்த ஓர் உரு, அவ்வளவு தான்! ஆனால் இயக்கத்திற்குரிய புலன்கள், பொறிகள் கிடைக்கவில்லை. ஆம்! தாயின் கருப்பையே உயிருக்கு முழு வடிவம் கொடுக்கிறது. ஆகா! என்ன அற்புதம்! ஜவ்வரிசிப் பிரமாணமுள்ளதா யிருந்த விந்துவை முதலாகக் கொண்டு