பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

247


வரவில்லை. ஆனால் இந்த நிலையையே முழுமை நிலை என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு.

அடுத்த நிலை, குலம் சார்ந்து வாழ்தல்! அதாவது, குல மரபு பேணிக் காத்து வளர்த்தல், இங்குக் குலம் என்று கருதப்பெறுவது சாதியன்று. குலம் என்பது ஒழுக்கம், பண்பு சார்ந்த மரபு! அதாவது வழி வாயாக ஒரு சிறந்த நற்பண்பு மீதூர்ந்து வருதல்.

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்

என்றார் கம்பர்.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள

என்பது திருக்குறள். ஆதலால்; தான் பிறந்த குலம் சார்ந்த சிலரொடு உறவு நலம் காத்தல், பண்பு நலம் சார்ந்த வாழ்வியலுக்குத் தேவை. குலம் பொருந்தி வாழ்தலுக்கும் அடுத்த நிலை, சுற்றம் சூழ வாழ்தல்! சுற்றம் சூழ வாழ்தல் அன்பினை வளர்க்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; பாதுகாப்பு உணர்வு மேலிடும். கோட்டை, கொத்தளங்கள் தரும் பாதுகாப்பிலும், சுற்றம் தரும் பாதுகாப்பு மிகுதி. சிறந்த சுற்றம் வாழ்விற்கு தூண்டுகோல், நெம்புகோல்! சுற்றம் தாங்குகோலாக வளர்ந்து விளங்கும். குற்றம் குறைகளை மறந்து சுற்றம் பேணுதல், வாழ்க்கை வளரத்தேவை. வாழ்க்கை வளர்ச்சியின் முழுநிலை ஊரில் நிறைவு பெறுகிறது.

ஆம்! ஊரோடு சார்ந்து ஊரவர் கேண்மை பேணி வாழ்தல் வேண்டும். ஊரை வளர்த்து வாழ்தல் வேண்டும். ஊர் எது? ஆன்றவிந்து அடங்கிய கொள்கைக் சான்றோர் பலர் வாழ்வது ஊர், ஊர் பழித்ததாலும் அதனை அணியெனக் கொண்டொழுகி ஊராகி வாழ்தலே வாழ்வின் நிறைவு. இதுவரையில் நலஞ்சார்ந்த வாழ்நிலை. நிறை நலம்