பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
251
 

காணோம். தண்ணளியைக் காணோம். வேற்றுமையைக் காண்கிறோம். இந்த அவல நிலைமை எங்கிருக்கிறது. எங்கு இல்லை என்று சொல்ல முடியாது; எங்கும் பரவிக் கிடக்கிறது.

சமயம், ஒரு தத்துவம் மட்டுமல்ல, அஃதொரு வாழ்க்கை முறை. கடவுள், வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வுப் பொருள்; சமயம் உருவங்களோடு நிற்பதன்று. உருவங்களைக் கடந்த உணர்வுகளால், உணர்வுகளையும் கடந்த இன்ப அன்பால் மனித மனங்கள் மலரினும் சிறந்து மணம் பரப்ப வேண்டும். கனியினும் சிறந்த கனிவு பெற வேண்டும்; தீங்கரும்பினும் சிறந்த சுவை பெற வேண்டும். அப்பொழுதே சமய வாழ்வு முழுமை பெறுகிறது. இறைவன் தீதற்றோர் திருவுள்ளங்களில் எழுந்தருளவே விரும்புகின்றான், காஞ்சி மன்னன் கட்டிய பெருங்கோயிலை வறிதே விட்டு விட்டு, உள்ளத்தால் தூயதாகிய பூசலார் மனத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். ஆதலால் உள்ளத்தைக் கோயிலாக்குங்கள்! அதனை அன்பினால் மெழுக்கிடுங்கள்! இறைவனை எழுந்தருளச் செய்யுங்கள்! பண்டு கண்ணப்பன் வழங்கிய அன்பினைப் போன்று இறைவனுக்கு வழங்குங்கள்! அவனுடைய தண்ணருள் சுரக்கும்; புன்புலால் யாக்கை புனிதமாகும். உங்கள் புலன்களில் இறைவன் தங்கித் திளைப்பான்! திருவருள் சுரப்பான். இன்பமே சூழும். எல்லோரும் வாழ்க!

25. அப்பரடிகளின் தொண்டு நெறி!

மனித உலக வாழ்க்கையின் நியதி வளர்தல், வளர்தல், வளர்தல்! இவ்வளர்ச்சிக்குத் தடை, பழமைகளின் மீதுள்ள பிடிப்பின் காரணமாகச் சிந்தனையில், செயலில் தேங்கிக் கிடத்தல், தேக்கத்தை மறுப்பதற்காகவும், மறைப்பதற்காகவும் உழுதசால் வழி உழுதல் செய்வர். உழுதசால் வழி உழும்போது பொய்த் தோற்றமான ஒர் இயக்கம் இருக்கும்.