பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், உண்மையில் இயக்கம் இருக்காது. ஆங்கு உயிர்ப்புள்ள பழமையும் இருக்காது; புதுமையும் இருக்காது. ஏன்? உயிர்ப்புள்ள பழமையினால் புதுமையைத் தோற்றுவிக்காதிருக்க முடியாது.

எப்படி ஒரு மனிதன் செத்துப் பிணமாகிய பிறகு உயிர்ப்பில்லாது போகிறானோ, உற்பத்திக்குப் பயன்படாது போகிறானோ அதுபோலவேதான் ஒரு தத்துவம், ஒரு கொள்கை உயிர்ப்பில்லாத நிலையில் முடக்கப்படுமானால் வளர்ச்சிக்குத்த துணை செய்யாது. ஆங்கு முன்னைப் பழமையுமில்லை. பின்னைப் புதுமையுமில்லை. இங்ஙனம் சமய உலகம் தேங்கிக் கிடப்பதை எதிர்த்தார் அப்பரடிகள். அவர் சமய தத்துவங்களை உயிர்ப்புடன் ஆய்வு செய்ததால்தான் சமணத்திற்குச் சென்றார்; பின் சைவத்ததிற்கு வந்தார்; பின் இரண்டும் கடந்த பொதுமை நிலைக்கு வருகிறார்.

உழுதசால்வழி யேஉழு வான்பொருட்(டு)
இழுதை நெஞ்சம்இது என்படு கின்றதே!

(அப்பரடிகள் 5-891)

என்று இடித்துக்காட்டி 'எல்லா உலகமும் ஆனாய் நீயே!' என்ற பொதுமை நெறியையும் காட்டுகின்றார். இறைநெறி, ‘இது’, ‘அது’ என்ற சண்டைகளுக்கு இரையாகக் கூடாது. எல்லாம் வல்ல இறைவன் 'இதற்குள்ளும்' 'அதற்குள்ளும்' மட்டும்தான் இருக்கின்றான் என்றால் இறைவனுடைய பரந்துபட்ட நிலை என்னாவது?

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்துஈசன் திறமேபேணி

(அப்பரடிகள் 6,613)

என்பது அப்பரடிகள் வாக்கு. ஈசன் உயிர்களின் தலைவன் என்பது பொருள். சிறுமதிபடைத்த மனிதர்கள், உயிர்க்குலத்-