பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

253


தினரிடையில் வேறுபாடுகளை உண்டாக்கினர்; வேலிகளை அமைத்தனர். சின்னப் புத்தியின் காரணமாகத் தோன்றிய இந்த வேற்றுமைகளை இறைவன் பாற்படுத்தியும் கதைகள் கட்டத் தொடங்கி விட்டனர். அப்பரடிகள் இத்தகைய சிறுமைத்தனமான வேறுபாடுகளை முற்றாகக் கடிந்தவர். அவர் ஒரு பொதுமை நெறியாளர். -

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

என்ற அவரது வினாவே இதற்குச் சான்று.

இயற்கை உலகு, மானிட சாதிக்கு உணவாக, மருத்துவமாக, உணர்வளிக்கும் ஆசிரியனாக, எல்லை கடந்த இன்ப அன்பினை அளிக்கும் இறையாக விளங்கி வாழ்வளிக்கிறது. . இயற்கையோடியைந்த வாழ்வு யாண்டும் இல்லை. எங்கும் உயிர்ப்பில்லாத செயற்கை உலகு ஊடாடிக் கிடக்கிறது.

மனிதன் இயற்கையாகச் சிந்திப்பதில்லை. அவன் சார்பு வழிச் சிக்கியும், தன்னல வயப்பட்டும் சிந்திக்கிறான். அதனால் அச்சிந்தனையில் உயிர்ப்பில்லை; கவர்ச்சியில்லை. மனிதன் இயற்கையில் நுகர்ந்து வாழப் பொருள் ஈட்டுவதில்லை! துய்த்தும் மகிழ்வதில்லை; உயிர்ப்போடு உலா வந்து உலகத்தை வாழ்விக்கும் செல்வத்தைச் சிறைப் படுத்துகிறான்.

ஒருவன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். மற்றவன் கள்வனாக மாறுகிறான். இம்மறைகேடு, செல்வம் ஈட்டுதலில். இயற்கையாக வேண்டிய உழைப்பாற்றலைச் செலுத்தாமையும் உழைப்பின் விலையைக் கொடுக்காமல் பொருள்களின் மீது ஆசைப்படுதலும் தோன்றியவுடனேயே களவும் காவலும் தோன்றிவிட்டன. இஃது இயற்கை நெறி பிறழ்ந்த வாழ்வு. மனிதர்களிடையில் இன்று நிலவும் உறவுகள் கூட இயற்கையில் அமைந்தவையல்ல. மனித உறவுகளிடையே இன்று பேசப் பெறும் அன்பு, காதல் ஆகியவற்றில் கூட,