பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
266
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

பாட்டின் சின்னமே கண்ணப்பர். அதனாலன்றோ திருவருள் இன்பத்தில் ஆவியோடாக்கை புரை புரை அழுத மாணிக்க வாசகரும் “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு”, என்று குறிப்பிடுகின்றார். கண்ணப்பர் வரலாற்றில் வரும் சிவகோசாரியார் அறிவின் சின்னம், சடங்கின் சின்னம். இறைவன் மகிழ்ந்தது கண்ணப்பரின் பூசையிலேயேயாம். கண்ணப்பர் தமது திருவாயில் தண்ணீர் கொணர்ந்து உமிழ்ந்து திருமஞ்சன மாட்டியதைச் சேக்கிழார் “அன்பு உமிழ்வார்” என்று குறிப்பிடுகின்றார். இத்தகு அன்பு வழிபாடு நாட்டில் பெருக வேண்டும். அப்பரடிகள் குறிப்பிடுவதுபோலப் போதொடு நீர் சுமந்து பலர் திருக்கோயிலுக்கு வர வேண்டும். இத்தகு வழிபாட்டுமுறை வளர்வதால் மக்களுக்குள் ஒருமைப்பாடு பெருகும். திருத்தொண்டின் நெறி வளரும். இந்த அன்பை வளர்த்துக் கொள்ளும் பண்ணைகளுள் ஒன்று, சிவ பூசை. பிறிதொன்று, மக்களுக்குச் செய்யும் தொண்டு. நம்முடைய சமய நெறி தொண்டினாலேயே வளர்ந்த ஒன்று. அப்பரடிகள் எங்கும் ஈசன் இருக்கிறான் என்று கருதித் தொண்டு செய்யாமல் கங்கையிலும், காவிரியிலும் சென்று நீராடுவதைக் கடிந்து பேசுகிறார். “கங்கையாடிலென், காவிரியாடிலென், கொங்கு தண்குமரித்துறை ஆடிலென் ஒங்குமா கடல் ஒத நீர் ஆடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லேயே” என்று குறிப்பிடுகிறார். இதைவிட முற்போக்கான குரல் வேறெந்த நாட்டிலே பிறந்தது. வேறு எம்மொழியிலே பிறந்தது. இவ்வளவுதானா இதை விடக் கடுமையான தாக்குதலும் உண்டு; படித்துப் பாருங்கள். “இரப்பவர்க் கீயவைத்தார், ஈபவர்க் கருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம், கடுநரகங்கள் வைத்தார்” என்றும் பாடுகிறார். மக்கட்குத் தொண்டு செய்வது இறைவன் உவக்கும் செயல் என்பது நம் ஆன்றோர் கொள்கை. பிற்காலத்தில் புண்ணியத்தை இருவகையாகப் பிரித்தார்கள். பசு புண்ணியம் உயிர்களுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. பதி புண்ணியம் இறைவனுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. இதில் பசு புண்ணியத்-