பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பரடிகளின் போராட்டங்கள்

271


“தெருளும் உணர்விலாத சிறுமையேன் யான்” என்று தம்மை அப்பூதியடிகளிடம் அப்பரடிகள் அறிமுகப் படுத்திக் கொண்ட பாங்கு, அப்பரடிகளின் எளிமைக்கு ஒர் எடுத்துக் காட்டு என்று துணிந்து கூறலாம்.

அப்பரடிகள் நாளும் தமது பொறிகளுடன் புலன்களுடன் போராடி வெற்றி பெற்றுச் சீரான நிலையில் வைத்துக்கொண்ட ஞானத் தலைவராக விளங்கினார் என்பதை உன்னுக.

அப்பரடிகள் நாளும் உய்யும் நெறி நாடுகின்றார். அவர்தம் அகத்தினில் ஞானவிளக்கை ஏற்றிக்கொண்டு வேண்டிய அளவு தூண்டிவிட்டு மகிழ்கின்றார். இந்த மகிழ்ச்சியை அப்பரடிகள் அனுபவிக்க முடியாதபடி ஐம்பொறிகள் அகநிலையில் போராடுகின்றன என்று அருளியுள்ளார்! அப்பரடிகள் தனக்குத்தானே போராடித் தன்னை வென்ற தலைமகனாக விளங்கிய பெற்றிமை உலக வரலாற்றிற்கு ஒர் அற்புதமான செய்தி!

அப்பரடிகளை உலகியல் மட்டுமல்ல, வானுலகமே வந்து கவர்ச்சியூட்டினாலும் அப்பரடிகள் சித்தம் திரிந்தாரில்லை. கலங்கினாரில்லை என்பதைச் சேக்கிழார்,

இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தல்த்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது செய்பணியின் தலைநின்றார்.

என்று அருளியுள்ள பாடல் உணர்த்துகிறது. அப்பரடிகள் தன்னைத்தானே வென்றெடுத்து விளங்கிய அருள்ஞானச் செல்வர் என்பதை உணர்த்துகிறது.

இங்ஙனம் அப்பரடிகள்,

ஈர நெஞ்சினர் யாதும் குறைவிலர்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ

என்று சேக்கிழார் போற்றியபடி விளங்கினார்.