பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
274
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

நெறி காட்டுகின்றார். தர்மகர்த்தாப் பொருளாதார முறையை அறிமுகப்படுத்துகின்றார். தனியுடைமைச் சமுதாயந்தான்! ஆனால் உடைமைகள் இறைவன் தந்தவை; இறைவனுக்குச் சொந்தமானவை. அந்த உடைமையின் பாதுகாப்பாளனே மனிதன்! உடைமைகளின் பயன் தேவைப்படுவோருக்குச் சென்றடைய வேண்டும். இஃதொரு புதுமையான பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கையை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அறிஞர்கள் ஏற்று வரவேற்றனர். அண்ணல் காந்தியடிகள் பொருளாதாரத்தில் தர்மகர்த்தா முறையை விரும்பினார். ஆனாலும் நடைமுறையில் தர்மகர்த்தா முறை வெற்றிபெறவில்லை. அப்பரடிகள் தர்மகர்த்தா முறையை,

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே

(4 ஆம் திருமுறை)

என்று கூறி விளக்குகின்றார்.

தர்மகர்த்தா முறை, ஏன் சமுதாயத்தில் வெற்றி பெற வில்லை. தர்மகர்த்தா முறை வெற்றிபெற முதல் தேவை மனித மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு. அதாவது, மனிதனை மனிதனாக மதிப்பதற்கு வேறு தேவைகள்-சாதி, பொருள், பதவி முதலியன அவசியமில்லை. இன்று நம்மிடையே நிலவுவது பணமதிப்பீட்டுச் சமுதாயமே. ஆதலால் எப்படியும் பணத்தைச் சேர்! உடைமையைப் பெறு! என்ற நிலை உருவாயிற்று. இதன் காரணமாகப் பணம், உடைமை, சமுதாயத்தை மேலாண்மை செய்வதால் மனிதன் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். இந்த நிலைமாறவேண்டும். இந்த நிலை எளிதில் மாறுமா? மாறாது! இதற்கு முதலில் மக்கள்நலம் கருதும் அரசு (Welfare State)