பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பரடிகளின் போராட்டங்கள்
275
 

தேவை. மக்கள் நலனுக்குரிய அடிப்படைத் தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசு வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையாகிய கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் ஆகியன அனைவருக்கும் எளிதில் தரமான முறையில் கிடைக்க அரசு பொறுப்பேற்க வேண்டும். இன்று நமக்கு வாய்த்துள்ள அரசு, பெயரளவிலேயே 'மக்கள் நல அரசு’. நடைமுறையில் அப்படி இல்லை. ஆதலால், சுரண்டல் முறைப் பொருளாதாரம் ஒழிய எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான இடம் நோக்கி இவ்வையகம் நகர, அப்பரடிகள் காட்டிய-அமைக்கப் போராடிய தர்மகர்த்தா முறையே நல்லது.

அப்பரடிகள் மெய்ப்பொருள் தேடிய தவநெறிச் செல்வர். செம்பொருள் உணர்ந்த செம்மல். அப்பரடிகள் சமயத்துறையில் அகம் நிறைந்த அன்பில் கனிந்து நிகழும் வழிபாட்டையே விரும்புகின்றார். மற்றபடி சடங்குகளை எதிர்த்துப் போராடுகின்றார். வழிபாட்டுக்கு “அன்பலால் பொருளும் இல்லை” என்பது அப்பரடிகள் கொள்கை - கோட்பாடு. அரனுக்கு அன்பில்லாது, உயிர்களிடம் அன்பில்லாது, ஆயிரம் ஆயிரம் தீர்த்தமாடுவதில் என்ன பயன்? என்பது அப்பரடிகளின் கேள்வி.

கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஒடும் நீரினை ஒட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே!

என்றும்,

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
பொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே!