பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பரடிகளின் போராட்டங்கள்
277
 

யாளத்தைப் பெறவே சாகும்வரை போராடத் துணிந் துள்ளார் என்பதனை,

புன்னெறியாம் அமண் சமயத்
தொடக்குண்டு போந்த வுடல்
தன்னுடனே உயிர் வாழத்
தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக! நின்
இலச்சினையிட் டருள்! என்று
பன்னு செழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்

(பெரிய புராணம் திருநாவுக்கரசு சுவாமிகள் பக். 211)

என்ற பாடல் விளக்குகிறது. ஆதலால், சாகும்வரை போராட்டம் என்பது அப்பரடிகள் கண்ட முறை.

அப்பரடிகளுக்குத் திருக்கயிலைத் திருக்கோலம் காண விருப்பம். தமிழகத்திற்கும் கயிலைக்கும் உள்ள நெடுந் தொலைவுபற்றி எண்ணினார் இல்லை; கவலைப்பட்டாரில்லை. கயிலைக்குப் பயணம் தொடங்கிவிட்டார். தொடர்ந்து நடக்கமுடியவில்லை. படுத்து ஊர்கிறார். உடம்பெல்லாம் தேய்கிறது. செங்குருதி சிந்துகிறது. ஆயினும் அப்பரடிகளிடத்தில் சோர்வில்லை. போர்க்குணம் ஒய வில்லை. அப்பரடிகள் கயிலையைக் காணும் போர் முனையில் வெற்றி பெறுகிறார். ஆம்! அப்பரடிகளின் போராட்டத்தினை, நிறுத்துவான் வேண்டிக் கயிலையையே ஐயாற்றுக்கு மாற்றினான் எம்பெருமான்! கயிலையையே திருவையாற்றுக்கு மாற்றுகின்ற அளவுக்கு அமைந்த அப்பரடிகளின் போர்க்குணம் போற்றத்தக்கது.

இன்று எங்கும் அச்சம்! ஆசை! சோம்பல்! முழுச் சோம்பல்! வாழவில்லை; பிழைப்பு நடத்த ஆசை! இந்த உலகியல் வாழ்க்கையில் யாருக்கும் போர்க்குணம் இல்லை! ஆன்ம ஞான வாழ்க்கையிலும் போராட்டம் இல்லை!