பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருஞானசம்பந்தர்
25
 

தீமைக் கலப்பில்லாத நன்றாக இருத்தல் வேண்டும். ஒருபொழுது நன்றாகவும் ஒருபொழுது தீதாகவும் இருப்பது நன்றாகாது. அதுபோலவே, ஒருவருக்கு நன்றாகவும் பிறிதொருவருக்குத் தீதாகவும் அமைவது நன்றாகாது. இன்று நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய தீமையும் கலந்த நன்மைகளையே நன்மை என்றும் நன்று என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம். இறைவன் அப்படியல்ல. அவன் தீமையின் கலப்பே இல்லாத பூரண நன்மை என்பதை விளக்க, “நன்றுடையான், தீயதில்லான்” என்று கூறி விளக்கி அருளுகின்றார். நாம் அனைவரும் தீமைக் கலப்பில்லாத நன்மையை அடைய வேண்டுமாயின் “நன்றுடையானாக, தீயதில்லானாக”த் திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கவேண்டும். திருஞானசம்பந்தர் அருளிய பாடல்களைப் பாடும் வல்லமை பெற்று வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்.

தமிழில் திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைகள் ‘முத்தமிழ் நான்மறை’ என்றும் “பண்பொலி நான்மறை” என்றும் போற்றத்தகுவன. நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்தவர் திருஞானசம்பந்தர்; தமிழ் நெறியை வளர்த்தவர். திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருநெறிய தமிழ் வளர்க! வையகம் துயர் தீர்க!