பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறியாமல் சிலையாக்கி சிறைப்படுத்தி வைத்திருக்கும் சைவர்களின் நிலைமையை நான் என்னென்பேன்” என்று கூறியபோது அவை மெய்சிலிர்த்தது. ஆவேசம் கொண்டது. 20-ஆம் நூற்றாண்டின் வரையிலும்கூட நிறபேதத்தை ஒழிக்காத மேலைநாடுகள் உண்டு. 7-ஆம் நூற்றாண்டிலேயே சாதி இன வேறுபாடுகளைச் சாடிய பெருமை அப்பரடிகளுக்கு உண்டு. அவர்தம் ஒருகுல நெறி பேணாமல் இன்றைய கோயில்களும் மடங்களும் சாதி குலவேற்றுமைகளை மேலும், மேலும் வளர்த்து வருகின்றன. அவர்களுக்கு அப்பரடிகள் பெயரைச் சொல்ல உரிமை ஏது? நான் கம்யூனிஸ்டாக இருந்தாலும் எனக்கே அந்த உரிமை உண்டு என்று அப்பரடிகள் மீது உரிமை கொண்டாடினார் ஜீவா! பின், அப்பரடிகள் பாடல்களில் பல்வேறு பாடல்களை எடுத்துக் காட்டினார். 'இரப்பவர்க்கு ஈய வைத்தார். ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்’ என்ற திருப்பாடலை அவர் சிந்தனை கலந்த நகைச்சுவையுடன் விமரிசனம் செய்தது இன்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. பசி என்று கேட்பவனுக்குக் கொடுத்து வாழ்பவனுக்கே திருவருள். இல்லையென்று கூறி வஞ்சித்து வாழ்பவனுக்கு நரகம். இது அப்பரடிகள் கருத்து-இல்லை ஆணை! இன்றோ சமயநெறி நிற்பவர்கள் கொடுக்காதது மட்டுமல்ல-கொள்வதையே கடமையாகக் கொள்ளுகிறார்கள். பலரை வஞ்சித்து வாழ்பவர்களும் இன்று மிக எளிமையாகச் சமயப் போர்வை போர்த்திக் கொள்ளு கிறார்கள், என்று உணர்ச்சி ததும்ப எடுத்துக் காட்டியபோது அவையில் அமைதி நிலவியது.

இங்ஙனம் மார்க்சீய சித்தாந்தத்தில் ஊறிய அமரர் ஜீவா, இந்த நாட்டுக் கவிஞரை - பண்பாட்டை மறக்காமல் பாராட்டியது. பெருமைக்குரியது - பாராட்டுதற்குரியது: அமரர் ஜீவா, இயற்கையிலே ஒரு சிந்தனையாளர். சமுதாய மாற்றத்தைச் சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில்