பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
288
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

நினைந்துாட்டும் தாய் சிறப்பானவள். இறைவனாகிய தாயும், இத்தகைய தாயையும்விடச் சிறந்த முறையில் அருள் வழங்குகின்றான். 'நினைந்தூட்டும் தாயினும்' என்ற வரி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இந்த வரியின் பொருளைத் திருக்குறள் இன்பத்துப்பால் தெளிவாக விளக்குகிறது. தலைவன் தலைவியிடம் 'உன்னை நினைந்தேன்’ என்று கூறினான். உடனே தலைவி அழுதாள். 'ஏன்?' என்று தலைவன் கேட்கத் தலைவி, 'நினைந்தேன்’ என்றால் நினைப்பதற்கு முன் மறந்ததும் உண்டன்றோ? என்கிறாள். மறதிக்குப் பின் தோன்றுவதே நினைவு. இறைவன் நினைந்தருள் வழங்கினான், என்றால் ஒருபோது மறந்தானோ என்ற கேள்வியும் எழும். அவன் ஒருபோதும் உயிர்களை மறக்கவில்லை என்பதைக் குறிக்கவே மாணிக்கவாசகர் இங்ஙனம் குறிப்பிடுகிறார்.

இறைவனின் திருவருளின்பம் நாம் பெறுவதல்ல-அவன் வழங்குவதேயாம். வான்பழித்து, மண் புகுந்து மனிதர்களை ஆட்கொள்கிறான். அவனுடைய திருவருளினாலேயே நாம் ஆட்கொள்ளப் பெறுகின்றோம். அவன் நம்மை ஆட்கொள்வதற்காகவே கோலங்கள் தாங்குகின்றான். ஆயிரம் திருநாமங்கள் பெறுகின்றான். எனவே, இறைவனை நாம் தேடிப் பெறுவதில்லை. அவனே நம்மை நோக்கி ஓடி வருகிறான். அவன் ஓடிவரும்போது நாம் அவனை இழக்காமல் பற்றிக் கொள்ளவேண்டும். மழையை நோக்கி மனிதன் போவதில்லை. மழைவளந்தரும் புயல் வானிலே பரவி வான் வீதியில் வருகிறது. அப்புயலைத் தீண்டி நீர்த் துளிகளாக மாற்றி மழையாகப் பெற மண்ணகத்தே குளிர்காற்றுத் தேவை. குளிர்ந்த காற்றுள்ள இடத்தில் மழை நிறையப் பெய்கிறது. மண் வளம் செழிக்கிறது. அது போலவே இறைவனுடைய திருவருள், வேற்றுமையின்றி எங்கும் பரவிக் கிடக்கிறது. அதைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள நம்முடைய நெஞ்சத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதலால்தான் நாம் இறைவனைத் தேடிப் போவதில்லை. அப்படித் தேடிப் போவதாலும் அவனைக்