பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜீவா பார்வையில் அப்பரும் மணிவாசகரும்

289


காண முடியாது என்ற கருத்தை அருணகிரியார் அழகாக - தெளிவாக விளக்குகிறார்.

மனித மனம் ஒரு புரியாத புதிர் - அது செல்லக்கூடிய வேகம், மின் அணு அலைகள் செல்லும் வேகத்தைவிட அதிகமானது. அது எங்கும் செல்லும்-எப்போதும் செல்லும், சிறகடித்துப் பறந்து செல்லும். அது நல்லதா? தோட்டத்தில் மேயும் மாடு பட்டிக்குப் போகிறது. அடுத்த வீட்டு வாழ்வில் உலாவி மேயும் மனத்தை எந்தப் பட்டிக்கு அனுப்புவது? மாட்டை அடக்கப் பட்டி, மனத்தை அடக்கப் பக்தி. பட்டியில் அடைத்த மாடு வேறு வழியால் வெளியே போய்விட்டால் பட்டியால் பயனில்லை. பக்தியிருந்தும் பலர் வாழ்வில் மேய்ந்தால் அந்த பக்தியால் பயனில்லை. 'தடுங்கோள் மனத்தை' என்று ஆணை இடுகிறார் அருணகிரியார். கண்டபடி மேயும் மாட்டைக் கட்டிப் போட்டால் பொறுமையாக இருக்குமா? ஆத்திரப்படும், அறுத்துக்கொண்டு போக முயற்சிக்கும் - தடுத்து நிறுத்தப் போனால் கோபத்தோடு முட்டும். விரைந்து வேகமாகச் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்தி வாழாது போனால் வெகுளி வாழ்க்கையை வெருட்டும். ஆதலால்தான் ‘விடுங்கோள் வெகுளியை' என்றாணையிடுகிறார். மனத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தினமையையும், வெகுளியை விட்டொழித்தமையையும் காட்டுவன தன்னலச் சார்பு அழிதலும் பிறர் நலப்பற்றுக் கால்கொள்ளுதலுமேயாம். அப்பொழுது எதுவும் தனக்கு மட்டும் உரியதல்ல-பிறர்க்கும் உரியதாகும். ஏன்? தாம் அனுபவிப்பதைவிட பிறரை அனுபவிக்கச் செய்வதிலேயே ஆனந்தம் காண்பர் மேலோர். இங்கேதான் பிறக்கிறது தானம். இப்படிச் செய்வதற்குத்தான் தானம் என்று பெயர். இன்றைய வழக்கில் தானம் என்றால் பாவக் கழுவாய்க்காக வணிகக் கண்ணோட்டத்தோடு இன்னாருக்குத்தான் கொடுப்பதென்ற வரையறையோடு நடை முறை இருந்து வருகிறது. அது சரியன்று. இதனால் 'தானம் என்றும் இடுங்கள்' என்று ஆணையிடுகிறார். இவ்வளவும் இருந்தாலும் போதுமா? சிலர் பரப்பாகவே திரிவார்கள்.

கு.இ.VII.19.