பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

293


தம்பி, மருள் நீங்கி, திருந்தியமனத்துடன் அருள்நெறி சார்ந்திடத் தவம் செய்தார். தவம் பலித்தது. எம்பெருமானின் அருளிப்பாடாக மருள்நீக்கியாரைச் சூலை நோய் பற்றியது. சமண, சமய முறைகளில் சமண முனிவர்களால் சூலை நோயை மாற்ற இயலவில்லை. கூற்றைப்போலக் கொடுமை செய்த கொடிய சூலையில் வாடிய மருள்நீக்கியார் திலகவதியாரை அடைக்கலம் புகுந்தார். அன்னையிற் சிறந்த திலகவதியார் மருள்நீக்கியாருக்குத் “திருவாளன் திருநீறு” தந்தருளித் திருக்கோயில் வழிபாட்டுக்கு ஆற்றுப்படுத்தினார். இதுவும் திருமுறை மரபில் தீட்சைமுறை. மருள்நீக்கியாரை மயக்கித் துன்புறுத்திய சூலையினின்றும் விடுதலை பெற்றார்; திருநாவுக்கரசரானார் “பண்ணார் இன்தமிழ்” பாருக்குக் கிடைத்தது.

அப்பரடிகள் பிற சமயத்தினின்று தாம் பிறந்த சமயத்திற்கு மீண்டார். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழகத்தில் சமயப்பூசல் கால் கொண்டது. எப்பொழுதும் நம்முடைய சமய நெறியாளர்கள் பிற சமயங்களைத் தாக்கும் வழக்கமுடையவரல்லர். வழிவழி சிவநெறியில் தோன்றிய மருள்நீக்கியார் சமண நெறியைச் சார்ந்தபொழுது, யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மருள்நீக்கியார் திரும்பத் தம்முடைய தாய்ச் சமயத்திற்கு வந்தபொழுது சமணர்கள் அரசின் துணைகொண்டு அவருக்குக் கேடு பல செய்தனர். அப்பரடிகள் திருவருள் துணை கொண்டு பகைப்புலத்துச் சோதனைகளில் வெற்றி பெற்றார். அப்பரடிகள் மூலம் தமிழகமே தம் வழிவழி மரபுகளைப் பாதுகாத்துக் கொண்டது.

தமிழகத்தில் அப்பரடிகள் உலா வந்தது ஏழாம் நூற்றாண்டில். உலகம் முழுவதும் ஏழாம் நூற்றாண்டில் மக்களின் சமூக வாழ்க்கை முறை பற்றிய கருத்துக்கள், சமய வாழ்க்கை ஆகியன எப்படியிருந்தன என்று அறிந்து கொண்டாலே, அப்பரடிகளின் அருமை நமக்கு விளங்கும்.