பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருநாவுக்கரசர்
299
 

கருத்து வேற்றுமையில்லை. ஆனாலும், அந்த மருந்துகள் அவருக்கு உரிமையுடையன என்பதால் அவரே மருந்துகளை உண்ண முடியாதல்லவா? நோயுடையார்க்குத் தானே மருந்து; வறுமையைப் “பிணி’ யென்றும், செல்வத்தை “மருந்து” என்றும் இலக்கிய உலகம் குறிப்பிடும். செல்வம் என்ற மருந்தைப் பெற்றிருப்பவர்கள் வறுமைப் பிணியாளர்களுக்கு வழங்கவேண்டும். அதுவே நியதி; நீதி. இந்த நீதி முறையில் வாழ்கின்றவர்களுக்கே நீதி தேவனின் அருள் கிடைக்கும். இந்த நீதியைப் புறக்கணிப்போரை நரகத்திலேயே இறைவன் இடுவன்.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே.

இது அப்பரடிகளின் திருப்பாடல்.

அப்பரடிகள், “மக்கள் மனத்தில் வஞ்சகம் வற்ற வேண்டும்; பக்திப்புனல் பெருக்கெடுக்க வேண்டும்,” என்ற நோக்குடையவர். அப்பரடிகள் பக்தியிற் சிறந்து விளங்கினாலும், பக்தி வாழ்க்கையில் நம்மை ஆற்றுப்படுத்தினாலும் அவர் திருத்தொண்டின் நெறியை மேற்கொண்டொழுகினார். அப்பரடிகள் வரலாற்றின் சாரம் - அப்பரடிகள் அருளிச் செய்த திருமுறைகளின் சாரம் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதாகும். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கியத்தில் உலகச் சமயங்களின் பிரிவினையும், மறைகளின் (வேதங்களின்) மறை முடிவுகளின் (உபநிஷதங்களின்) சாரத்தினையும் தந்துள்ளமை உய்த்-