பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

301


வேண்டும். தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தமிழகம் முழுவதும் இந்த - “உழவாரப் படை இயக்கத்தை” புதுப்பித்துச் செயற்படுத்தி வருகிறது. அப்பரடிகள் திருக்கோயில்களில் மட்டும் உழவாரப்பணி செய்யவில்லை. மக்கள் நடமாடும் திருவீதிகளிலும் கூட இந்தப் பணியைச் செய்திருக்கிறார். இதனையே, சேக்கிழார், 'பார்வாழத் திருவீதிப் பணி செய்வார்' என்று பாராட்டுகின்றார். அப்பரடிகள் திருத்தொண்டின் உருவமாகவே திகழ்ந்தவர். அப்பரடிகளின் கைத்திருத்தொண்டினைக் கண்டு கடவுளே மகிழ்ந்து அவருக்கு வாசியிலாக் காசு தந்தார். அப்பரடிகளை வாழ்த்தும்முறை, திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வழி நிற்றலேயாம்.

அப்பரடிகள் சிறந்த அருட்கவிஞர். அடிகள், தாம் அனுபவித்த அருளார்ந்த அனுபவத்தினை இனிய தமிழில், எளிய நடையில் ஒதுவோர் உணர்வைத் தொடத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அப்பரடிகள், அருள் நலம் செறிந்த கவிதைகளைக் கவிதையாக மட்டுமின்றி இசைத் தமிழிற் சிறக்கப் பாடினார். அப்பரடிகளுடைய அருட் கவிதைகள் கல்லையும் உருக்கும் கனிவுடையன.

அப்பரடிகள் பழந்தமிழ் யாப்பிலக்கணத்திற்கு இசைந்த வகையிலேயே, தமது பாடல்களை அருளிச் செய்துள்ளார். இல்லை, நிறைநலம் சான்ற நெஞ்சத்துட் பிறந்த கவிதைகளாதலால், இயல்பாகவே நிறை நலங்கள் வந்து பொருந்தி உள்ளன. அப்பரடிகள் “திருத்தாண்டகம்” என்ற புதுவகை யாப்பினைத் தமிழகத்திற்கு அளித்துள்ளார். திருத்தாண்டகம் பாடுவதில் அப்பரடிகள் தன்னேரில்லாதவராக விளங்கிய தால் “தாண்டகச் சதுரர்” என்றும் “தாண்டகவேந்தர்” என்றும் பாராட்டப் பெற்றுள்ளார். அப்பரடிகள் அருளிச் செய்துள்ள, ஆறாந்திருமுறை முழுவதும் தாண்டகத்திலேயே அமைந்துள்ளது. அப்பர் அடிகள் அருளிச் செய்துள்ள, திருவடித் தாண்டகப் பாடல்கள் மறைகளினும், மறை