பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

305


யொன்று தழுவி நிற்கவேண்டியவை. தனி உரிமை பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம். பொது உரிமை தாய்; தனி உரிமை சேய், ஆனால், சமுதாயப் பேரறிவு வளராததனால் தனி உரிமையிலிருந்துதான், பொது உரிமை தோன்றுகிறது என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப் படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமை தோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே, தனி உரிமை தோன்றுகிறது. நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாகப் பொது உரிமையைவிடத் தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் நம்முடைய சமுதாயத்தில் பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றே இருக்கின்றன.

அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள், தனியார் தொழில்களைவிட - தனியார் தொழில்களை நோக்கிடச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன்? நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே; அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது? இல்லவே இல்லை; இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பு ஏற்றிருக்கின்ற சிலரிடத்தில்கூட “அது பொது; ஆதலால் பேணுகிறோம்” என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது 'வேலை'; பலருக்கு அது ‘பிழைப்பு'! அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடைமைகளும் முதலீடுகளும், பல்கிப் பெருக வில்லை. அண்மைக் காலமாகப் பொது நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. இது நல்ல திருப்புமுனை.

சமுதாயத்தின் இழிமனப் போக்கு இன்று நேற்றுத் தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான். ஊர் நடுவே ஒரு மன்றம். மன்றம் என்றால் பொது

கு. இ. VII .20.