பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
312
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளம் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள் செய்த வாருரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.

அப்பரடிகள் சிறந்த சமய மரபுகளை வலியுறுத்தியது போலவே, பொருந்தாத பழக்க வழக்கங்களையும் மறுத்துரைப்பர். பொருளற்ற - உணர்வைத் தூண்டி வளர்க்காத வெற்றுச் சடங்குகளை அப்பரடிகள் ஏற்றுக் கொண்டதில்லை. பொருள் புரிந்து கொள்ள இயலாத கூர்ச்சம் முதலியன பயன்படுத்தும் சடங்குகளைக் கண்டிக்கின்றார். ஏன்? எல்லா உலகத்தையும் இறைவனாகக் காண்கின்ற ஞான உணர்வு அப்பரடிகளிடத்தில் முகிழ்த்திருந்தது. “எல்லா உலகமும் ஆனாய்” என்றும், “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்றும், “வாசமலரெலாம் ஆனாய் நீயே” என்றும் “முழங்கு ஒலி நீரானான் கண்டாய்” என்றும், “பண்ணின் இசை நீயானாய்”, “பழத்திடைச் சுவை யொப்பாய்” என்றும் அப்பரடிகள் அருளிச் செய்த சொற்றொடர்களை நோக்கின், அடிகள் பெருமான் எல்லாம் வல்ல இறைவனை இந்த அண்டமாக, அண்ட சராசரங்களாக, இந்த அண்ட சராசரங்களில் நிலவும் உயிர்களுக்கு உயிராகக் கண்டு வழிபடுகின்ற ஞானப் பூசையையே போற்றிப் பாராட்டுகின்றார்.

“எங்கும் ஈசன் இருக்கிறான் என்று எண்ணி, அன்பு செய்யாமல் கங்கையாடுவதில்-காவிரியாடுவதில் என்ன பயன்?” என்று கேட்கிறார். அண்மையில் மறைந்த நமது பெரியாரும் இதே கேள்வியைத்தான் கேட்டார். அப்பரடிகள் கங்கையாடிலென்? காவிரியாடிலென்? என்று வினாக்-