பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின் மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.

இவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக்கூடுமென்று, உரையாடுவதற்குத் தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு பிறந்தது; அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும்பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. இந்தச் சமணர்களுக்குரிய பழக்கம் சமண முனிவர்களுக்கு விதித்த நெறி, எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய சமுதாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. அப்பரடிகள், “மூங்கை போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.

பொதுவாக, உண்பதும் ஒரு கடமையேயாகும். மிகச் சிறந்த பயனுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள, உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலியலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற் கலத்தல் - தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் சமுதாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற்